அமைச்சர்கள் ரமேஷ், நிர்மல் குமார் (இடமிருந்து வலமாக)
மதுரை: ”மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் சிறப்பு தரிசனத்துக்காக கோபுரத்தின் மீது நாங்கள் ஏறவில்லை. சிறப்பு தரிசனம் செய்யவும் முற்படவில்லை. பக்தர்கள் பாதுகாப்பு கருதி அனைத்து ஏற்பாடுகளையும் கீழிருந்து கவனமுடன் செய்தோம்” என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்தார்.
முன்னதாக, விஐபி தரிசனம் தொடர்பாக மக்கள் அமைச்சர் நிர்மல் குமார் காரை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா முடிந்த பின்பு புதுமண்டபத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் ரமேஷ், நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்தார்/
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேசுகையில், “மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா திட்டமிட்டபடி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கட்டுப்பாட்டு அறை அமைத்து செயல்பட்டதால் குடமுழுக்கு விழா எவ்வித பிரச்சினையுமின்றி சிறப்பாக நடந்துள்ளது. குடமுழுக்கு விழாவுக்கு உள்ளே சென்றவர்கள் பாதுகாப்பாக வெளியேறிய பின்பு மற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்களை கோயிலுக்குள் தரிசனத்துக்கு அனுப்பும் பணிகள் காவல்துறையின் திட்டப்படி செயல்படுத்தப்படும். பக்தர்கள் எவ்வித இடையூறின்றி தரிசனம் செய்யவும், அவர்களது பாதுகாப்பு கருதிதான் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்குள் பக்தர்கள் மீது டிரோன் மூலம் தீர்த்தம் தெளிக்க முடியாது என்பதால் சித்திரை வீதிகளில் வரும் பக்தர்களுக்கு டிரோன் மூலம் தீர்த்தம் தெளிக்கப்படும்.
சிறப்பு தரிசனத்திற்காக கோபுரத்தின் மீது நாங்கள் ஏறவில்லை. சிறப்பு தரிசனம் செய்யவும் முற்படவில்லை. பக்தர்கள் பாதுகாப்பு கருதிதான் அனைத்து ஏற்பாடுகளையும் கீழிருந்து கவனமுடன் செய்தோம். ஒருசில இடங்களில் தரிசனத்துக்கு விடுமாறு மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. அத்தகைய பக்தர்களிடம் பேசி, நெருக்கடி ஏற்படாமல் தரிசனம் செய்வதற்காக இத்தகைய ஏற்பாடுகள் செய்துள்ளோம், எனவே பக்தர்கள் அனைவரும் பொறுமையுடன் இருந்து தரிசனம் செய்யுங்கள் என்று கோருகிறோம்.
மேலும், பக்தர்கள் கோரிக்கையின்படி காலை 10 மணி தரிசனத்திற்கு முன்பாகவே காலை 8.15 மணிக்கே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பாதுகாப்பு கருதிதான் பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.” என்றார்.