படம்: எம்.சாம்ராஜ்

தமிழகம்

“எஸ்ஐஆர் மீது பழிபோட்டு தோல்வியை மறைக்க பார்க்கிறார் ராகுல்” - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

அ.முன்னடியான்

புதுச்சேரி: “காங்கிரஸின் சேவை, எதிர்கால திட்டங்களை சொல்லி வாக்கு வாங்க முடியாத ராகுல் காந்தி தேர்தல் ஆணையம், எஸ்ஐஆர் மீது பழிபோட்டு அவரது தோல்வியை மறைக்க பார்க்கிறார்” என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் அசாதாரண சூழலை உருவாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். தேர்தலில் எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுகிறதோ அங்கெல்லாம் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடுகிறார்.

எங்கெல்லாம் தோல்வி அடைகிறாரோ, அந்த நேரத்தில் தேர்தல் ஆணையத்தை குறை சொல்லி அதன் மூலம் பொய்யான மாயையை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சிக்கிறார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு நம்முடைய நாடு பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது. பொருளாதாரத்தில் 17-வது இடத்தில் இருந்த நம் நாட்டை 4-வது இடத்துக்கு கொண்டு வந்த பெருமை பிரதமரைச் சாரும்.

பல்வேறு மாநிலங்களிலும், மேலவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று வருகிறது. பாஜகவின் இந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி, அதனோடு சேர்ந்த எதிர்கட்சிகள், புதிதாக தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சமூக வலைதளங்கள் மூலம் நாட்டில் குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்து பிரதமர் மீதும், நாட்டின் மீதும், தேர்தல் துறையின் மீதும் பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

பல்வேறு நாடுகளில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. நம்முடைய இந்திய நாட்டில் பிரதமர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி இருக்கிறார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார்.

இப்படி அத்தனை நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும் சூழலில் எப்படியாவது இந்த அரசை குறை சொல்ல வேண்டும், இந்த அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ராகுல் காந்தி சதி செய்கிறார்,

எதிர்க்கட்சிகள் ஒரு நிலைபாட்டை எடுத்து போராட்டங்களை செய்து கொண்டிருகின்றனர். இதனை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதற்கு முன்பு 1,060 சட்டப்பேரவை உறுப்பினர்களை இந்தியா முழுவதும் பெற்றிருந்தது. ஆனால், இன்றைக்கு 663 சட்டப்பேரவை உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருக்கிறது.

பாஜக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 1,800-க்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. இவற்றையெல்லாம் பொறுக்க முடியாமல் எதிர்கட்சித் தலைவர் ‘ஆர்ப்பாட்டம், போராட்டம்’ என்று நாட்டு மக்களுக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்கின்ற வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

எஸ்ஐஆர் நடைமுறையை வைத்து எதையும் செய்துவிட முடியும், வாக்குகளை மாற்றிவிட முடியும் என்றிருந்தால் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்க முடியும்.

தங்களின் சேவை, எதிர்கால திட்டங்களை சொல்லி வாக்கு வாங்க முடியாத ராகுல்காந்தி தேர்தல் ஆணையம், எஸ்ஐஆர் மீது பழிபோட்டு அவரது தோல்வியை அதில் மறைக்க பார்க்கிறார். பாஜகவுக்கு எதிராக யாரெல்லாம் போட்டியிடுகிறார்ளோ அவர்கள் தவறான பொய் பிரச்சாரத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை பொதுமக்கள் நம்ப தயாராக இல்லை.

மக்களுக்கு சேவை செய்து மக்களின் மனதை கவர்ந்து அதன் மூலம் ஆட்சிக்கு வர பாஜக நினைக்குமே தவிர எந்த நேரத்திலும் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்ததில்லை, நினைத்ததும் இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், பாஜக சார்பில் வரும் 3-ம் தேதி புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே தவறான பொய் பிரச்சாரத்தை பரப்பும் எதிர்க்கட்சிகளை கண்டித்து பிரமாண்ட பேரணி நடத்த இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT