அமைச்சர் என்.ஆனந்த்

 
தமிழகம்

“மேகேதாட்டு அணை கட்ட விடமாட்டோம்” - பேரவையில் அமைச்சர் என்.ஆனந்த் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: ‘கர்நாடக அரசு காவிரியில் மேகேதாட்டு அணை கட்ட விடமாட்டோம். அணை கட்ட ஒரு கல்லைக்கூட வைக்க முடியாது’ என்று சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் உறுதிபட தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நீர்வளத்துறை மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதில் திமுக உறுப்பினர் துரை.சந்திரசேகரன் பேசும்போது, “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் வெளிப்படையாகப் பேசி வருகிறார்.

தமிழக முதல்வரோ மேகேதாட்டு விவகாரத்தை மென்மையாகக் கையாள்கிறார். மேகேதாட்டு பிரச்சினையில் தமிழக முதல்வர் காங்கிரஸ் கட்சியையும் பகைக்கக் கூடாது; பாஜகவும் பகைக்கக் கூடாது என எண்ணுகிறார். மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் முதல்வர் ஏன் பயப்பட வேண்டும்?” என்றார்.

அதற்கு நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், “முதல்வருக்குப் பயம் இல்லை. அவர் யாரைக் கண்டும் பயப்பட மாட்டார். மேகேதாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். கர்நாடக அரசு காவிரியில் மேகேதாட்டு அணை கட்ட விடமாட்டோம். அணை கட்ட ஒரு கல்லைக்கூட வைக்க முடியாது” என்றார்.

துரை.சந்திரசேகரன், “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழக எம்பிக்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். விவாதத்துக்கே வராத மசோதாவுக்கு காட்டும் கவனத்தை காவிரி பிரச்சினையிலும், மேகேதாட்டு அணை பிரச்சினையிலும் காட்ட வேண்டும்” என்றார்.

அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், “காவிரி பிரச்சினை ஏதோ நேற்று வந்த பிரச்சினை போல உறுப்பினர் பேசுகிறார். இது 50 ஆண்டு கால பிரச்சினை. இதற்குத் தீர்வு காண தமிழக முதல்வர் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதோடு பேச்சுவார்த்தையும் நடத்தி கொண்டிருக்கிறார். அனைத்து விதமான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. யாருக்கும் பயம் கிடையாது” என்றார்.

அதன்பின் முன்னாள் முதல்வர் பழனிசாமி, “1986-ல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே காவிரி பிரச்சினை இருந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பும் பெற்றோம். கர்நாடக அரசு அவ்வப்போது மேகேதாட்டு அணை பிரச்சினையை கிளப்பி வருகிறது” என்றார்.

அப்போது, அமைச்சர் அருண்ராஜ், “காவிரி பிரச்சினையில் திமுக துரோகம் செய்தது” என்று கூற, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “1974-ல் இருந்தே காவிரி பிரச்சினைக்காக அன்றைய முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஆட்சியிலும் அந்தந்த முதல்வர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். காவிரி பிரச்சினையில் யாரும் தவறு செய்துவிட முடியாது” என்றார்.

அதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல் குமார், “காவிரி ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபோது 1974-ம் ஆண்டு திமுக அரசு புதுப்பிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று வினவினார்.

உடனே கே.என்.நேரு, “காவிரி பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அப்போதைய பிரதமர் சொன்னதன் பேரிலேயே வழக்கு வாபஸ் பெறப்பட்டது. காவிரி பிரச்சினையில் திமுக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தியது. யாரும் விட்டுக்கொடுக்கவில்லை” என்றார்.

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசை வலியுறுத்தி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த பெருமை முன்னாள் முதல்வர் பழனிசாமியை சாரும்” என்றார்.

பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், “காவிரி பிரச்சினை ஓர் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. அண்டை மாநிலங்களுடன் இணைக்கமான சூழல் பேணப்பட வேண்டும். காவிரி பிரச்சினையில் ஒவ்வொரு ஆட்சியிலும் அந்தந்த முதல்வர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமை உணர்வை வெளிக்கொண்டுவர வேண்டும்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT