அமைச்சர் மரிய வில்சன்
சென்னை: “அமைச்சர் மரிய வில்சனுக்கும், அவரின் சகோதரருக்கும் இடையிலான பிரச்சினை என்பது சொத்து பிரச்சினை அல்ல. அது, குழந்தை தத்தெடுப்பு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைதான்” என்று அமைச்சர் மரிய வில்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சகோதரரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நிதியமைச்சர் மரிய வில்சன் திரும்பப் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தி கூறியது: “அமைச்சர் மரிய வில்சன், அவரின் சகோதரர் மரிய குலோத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை என்பது குடும்ப பிரச்சினை. அது சொத்து பிரச்சினை அல்ல. குழந்தை தத்தெடுப்பு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைதான் அது.
வழக்கு தொடர்ந்து 4 ஆண்டுகளான நிலையில், அமைச்சரின் சகோதரர் மரிய குலோத், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இந்தச் சூழலில் திடீரென அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விவகாரத்தை பெரிதாக்கி வருகிறார்.
மரிய குலோத்தின் பின்னால் உள்ள ஏதோவொரு இயக்கம் இந்தப் பிரச்சினையை அமைச்சருக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது.
எதிர் தரப்பு மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக நடந்த சமரச தீர்வு மையத்திலும் மரிய வில்சனின் சகோதரர் மரிய குலோத், தத்தெடுத்த குழந்தையை மறைத்து வைத்து, அமைச்சர் மரிய வில்சனின் அறக்கட்டளையை அபகரிக்கும் நோக்கிலும், கூடுதல் பணம் பறிக்கும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறார். அதனால்தான் சமாதானப் பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.
எனவே, இந்த வழக்கில் காவல் துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறது. அதை எதிர்த்து மரிய வில்சன் வழக்கு தொடர இருக்கிறார். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
தமிழக நிதியமைச்சராக உள்ள மரிய வில்சன் கடந்த 2022-ம் ஆண்டு ஆக.8 அன்று புதுச்சேரி எழில் நகரில் உள்ள தனது அண்ணன் மரியகுலோத்தின் வீட்டுக்குள் கதவை உடைத்து உள்ளே புகுந்து, மரியகுலோத் மற்றும் அண்ணி கெரோலின் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேலும் சில குற்றப்பிரிவுகளைச் சேர்த்து புதிதாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் மரிய வில்சனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், தனக்கு எதிராக புதுச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி மரிய வில்சன் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். ஹாஜா முகைதீன் கிஸ்தி, ‘தமிழக சட்டப்பேரவைக்கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ‘நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?
பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோதும்கூட ஒரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அமைச்சராகும் முன்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி வந்த மனுதாரர், நிதி அமைச்சராகி விட்ட பிறகு நேரில் ஆஜராக மாட்டாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.
பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மரிய வில்சன் தரப்பில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும் என்றும், புதிய குற்றப்பத்திரிகையை எதிர்த்து மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென்றும் கோரப்பட்டது. மேலும் ஆக.31-ம் தேதிக்குப் பிறகு அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவுள்ளதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.