அமைச்சர் மனோ தங்கராஜ்
மதுரை: “வட மாநிலங்களில் கொள்முதல் செய்த வெண்ணெய்யில் துர்நாற்றம் வந்ததால் திருப்பி அனுப்பிவிட்டோம். இதனால் ஆவினுக்கு எந்த பாதிப்புமில்லை” என அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரையில் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தேசிய பால் தினத்தை முன்னிட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் முன்னிலை வகித்தனர். இதில் பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பங்கேற்று ஆலோசனை செய்தார். இதில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியது: “மதுரை ஆவின் கடந்த காலங்களைப் போல் இல்லாமல் நல்ல லாபத்தில் இயங்கும் சங்கமாக மாறியிருக்கிறது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த தேனி மாவட்டத்திலுள்ள ஆவின் நிறுவனம் கடந்த 7 மாதமாக லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து சங்கங்களும் லாபத்தில் இயங்கி வருகிறது.
மதுரை ஆவின் லாபத்தில் இயங்குவதால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத் தொகை, தீவனம் ஒரு கிலோவுக்கு ரூ. 2 மானியம் வழங்கினோம். ஆவின் பொருட்கள் விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பால் கொள்முதலில் 50 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளது. தரத்திற்கேற்ற விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக 10,450 கறவை இயந்திரங்கள் வழங்கி, அதிகபட்ச தரத்தை உத்தரவாதப்படுத்தியுள்ளோம்.
வட மாநிலங்களில் வெண்ணெய் கொள்முதல் செய்ததில் குறைபாடு என புகார் வந்தவுடன் உடனடியாக ஐஏஎஸ் அதிகாரியை அனுப்பி சரிபார்த்தோம். என்சிடிஎப்ஐ போர்ட்டலில் ஆன்லைன் மூலம் வெளிப்படையாகவே எந்தப் பொருளையும் வாங்குகிறோம். தரம் குறைந்தால் உடனடியாக கண்டுபிடித்து திருப்பி அனுப்பிவிடுவோம்.
அந்த வகையில் வெண்ணெய் கொள்முதல் செய்ததில் ஒரு துர்நாற்றம் இருப்பது தெரியவந்ததால், அதை திருப்பி அனுப்பிவிட்டோம். அந்த நிறுவனத்துக்கு பணம் எதுவும் வழங்கவில்லை. அதனால், ஆவினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆவினில் நிரந்தரமான விலை, பணத்துக்கு உத்திரவாதம் என்பதால் ஆவினில் பால் கொடுக்க முன்வருகின்றனர். மேலும், ஆவினில் கொடுப்பதுதான் பாதுகாப்பானது என நம்புகின்றனர்” என்று அவர் கூறினார்.