

ஊட்டியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற ‘ஜாலி போனிக்ஸ்’ திட்ட பயிற்சியில் பங்கேற்றோர்.
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில கற்றல் திறனை அதிகப்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் வேடிக்கை முறையிலான ‘ஜாலி போனிக்ஸ்’ திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் குன்னூர், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி வட்டாரங்களில் இருந்து 20 அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊட்டியில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மாணவர்களின் வாசிப்பு, எழுத்து, சொல் உச்சரிப்புத் திறன்களில் முன்னேற்றம் காணுதல், வகுப்பறை ஈடுபாட்டை அதிகரித்தல், ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்துதல், தொடக்க நிலை மாணவர்கள் ஆங்கிலத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்துதல் போன்ற முன்னேற்றச் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஜாலி போனிக்ஸ் இந்தியா நிறுவன பயிற்சியாளர் கோமதி பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் புத்தகங்கள், கற்றல்-கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் சின்னமாது, உதவித் திட்ட அலுவலர் அர்ஜூணன், மாவட்ட ஆட்சியர் நேர்முக எழுத்தர் (கல்வி) பிரமோத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு, செயற்கை ஒலியியல் மூலம் ஆங்கில எழுத்தறிவு கற்பிப்பதற்கு வேடிக்கையான மற்றும் குழந்தைத்தனமான அணுகுமுறையே ‘ஜாலி போனிக்ஸ்’ பயிற்சி முறை என அழைக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் மட்டும் இருந்த இப்பயிற்சி, தனியார் அமைப்புகள் சார்பில் அரசுப் பள்ளிகளிலும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ‘ஜாலி போனிக்ஸ்’ மற்றும் ‘ஜாலி கிராமர்’ பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், தமிழ்வழி பயிலும் மாணவர்கள், ஆங்கில எழுத்துகளில் உச்சரிப்பை எளிமையாக கற்க முடியும், என்றனர்.