தமிழகம்

துணை சுகாதார நிலையங்கள் 9,355 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 9,355 ஆக உயர்ந்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது செய்யூர் தொகுதி எம்எல்ஏ மு.பாபு பேசும்போது, ‘‘செய்யூர் பகுதியில் இயங்கும் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களையும், துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர்களை யும் நியமிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

          

அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது: கிராம சுகாதார செவிலியர் நியமனத்தை பொருத்தவரை, உச்ச நீதிமன்ற வழக்குகளை எல்லாம் சரி செய்து, 6 மாதங்களுக்கு முன்பு 2,600-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்களையும், சில தினங்களுக்கு முன்பு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் அமர்த்தப்பட்டு, கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடம் இல்லை என்ற நிலை முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்றபோது 8,713 துணை சுகாதார நிலையங்கள் இருந்தன. அதன்பிறகு புதிதாக 642 துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தில் துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 9,355 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 6,498 நிலையங்கள் சொந்த கட்டிடத்திலும், 1,214 நிலையங்கள் வாடகை கட்டிடங்களிலும், 1,643 நிலையங்கள் வாடகை அல்லாத கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன. 893 நிலையங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, 680 கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT