அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: பாதி வேகவைத்த கோழி இறைச்சியை உண்ண வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பறவைக் காய்ச்சல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகசுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
காகங்களோ கோழி போன்ற பறவைகளோ திடீரென்று காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்ததை பார்த்தால், உடனடியாக அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, ஆழமான குழியில் புதைக்க வேண்டும். கோழி போன்றவை திடீரென இறந்துபோனால், இறந்த கோழியை யாரும் சாப்பிடக் கூடாது.
மேலும் கோழி இறைச்சியை உண்பவர்கள், நன்றாக சமைத்த பின்பே அதை உண்ண வேண்டும். பாதி வேக வைத்த இறைச்சியை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்கள் இந்த அறிவுறுத்தல்களை அந்ததந்த பகுதிகளில் வழங்கி வருகிறார்கள். கடந்த 9-ம் தேதி தலைமைச் செயலர் அனைத்து அலுவலர்களுடன் கூட்டத்தை நடத்தி, இதுகுறித்து ஆய்வு செய்திருக்கிறார். தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.