சென்னை: பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு பிப்.15 முதல் வழங்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து வேளாண்மை துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குதல் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் 2025 குறுவை பருவத்தில் நெற்பயிர் அறுவடை பரிசோதனை விவரம், கணக்கீடு செய்யப்பட்ட சராசரி மகசூல் விவரம் தயார் செய்து காப்பீட்டு நிறுவனங்கள் தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தொகையை பிப்.15-ம் தேதி முதல் வரவு வைக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதேபோல், சம்பா நெல் பயிர் அறுவடை பரிசோதனை விவரம் 34 மாவட்டங்களில் 39,428 முறை நடத்தப்பட வேண்டும். இதில் தற்போது 25 சதவீதம் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 75 சதவீதம் முடிவுற்றவுடன் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
மேலும், சமீபத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு ஒருவார காலத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி, இயக்குநர் பி.முருகேஷ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.