தமிழகம்

வருகையில்லா ஆவணப்பதிவு திட்டத்தால் மக்களின் நேரமும், செலவும் குறையும்: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘வரு​கை​யில்லா ஆவணப்பதிவு திட்​டத்​தின்​மூலம் பொது​மக்​களின் நேர​மும், பயணச்​செல​வும் குறை​யும்’ என்று பதிவுத்​துறை அமைச்​சர் லோகேஷ் தமிழ்​செல்​வன் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் முதல்​முறை நிலம் மற்​றும் வீடு வாங்​குபவர்​கள் பதிவுத்​துறை அலு​வல​கம் செல்​லாமல் ஆன்​லைனிலேயே பதிவுசெய்​யும் ‘வரு​கை​யில்லா ஆவணப்​ப​திவு திட்​டம்’ ஆக.17-ம் தேதி முதல் அமலுக்கு வரு​கிறது.

இத்​திட்​டம் குறித்த கலந்​தாய்​வுக் கூட்​டம் பதிவுத்​துறை அமைச்​சர் த.லோகேஷ் தமிழ்​செல்​வன் தலை​மை​யில் சென்னை ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பதிவுத்​துறை செயலர் ஜெ.குமரகுருபரன், தலை​வர் ஜி.கே.அருண் சுந்​தர் தயாளன் உட்பட துறை​சார்ந்த அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். கூட்​டத்​தில் வரு​கை​யில்​லாப் பதிவு முறை தொடர்​பான செயல்​விளக்​கம் வழங்​கப்​பட்​டது. மேலும், வங்​கி​யாளர்​கள், நிதி நிறு​வனங்​கள் மற்​றும் கட்​டிட விற்​பனை​யாளர்​கள் முன்​வைத்த சந்​தேகங்​களும் தீர்க்​கப்​பட்​டன.

இக்​கூட்​டத்​தில் அமைச்​சர் பேசி​ய​தாவது: தவெக ஆட்​சிக்கு வந்​தது முதல் பொது​மக்​களுக்கு அரசு சேவை​களை எளிமை​யாக​வும், விரை​வாக​வும், வெளிப்​படை​யாக​வும் வழங்​கும் நோக்​கில் அனைத்து துறை​களி​லும் தகவல் தொழில்​நுட்​பங்​கள் திறம்பட பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

அந்த வகை​யில் பதிவுத் துறை​யில் வரு​கை​யில்லா ஆவணப்​ப​திவு திட்​டம் அமல்​படுத்​தப்பட உள்​ளது. முதல்​கட்​ட​மாக நிலம் மற்​றும் வீடு​களை முதல்​முறை வாங்​குபவர்​களின் ஆவணங்​கள் ஆக.17 முதல் வரு​கை​யில்லா ஆவணப்​ப​திவு முறை​யில் மேற்​கொள்​ளப்பட உள்​ளன.

பாதுகாப்பான முறை

இந்த நடை​முறை​யில் பதிவு செய்​யப்​பட்ட ஆவணம் பாது​காப்​பான முறை​யில் மின்​னணு வடி​வில் சம்​பந்​தப்​பட்ட நபரின் மின்​னஞ்​சல் முகவரிக்கு அனுப்​பப்​படும். இதனால் மக்​களின் நேர​மும், பயணச்​செல​வும் குறைவதுடன், பதிவு செயல்​முறை​யின் தரமும் மேம்​படும்.

இதுத​விர கட்​டு​மான நிறு​வனங்​கள், மேம்​பாட்​டாளர்​கள் மற்​றும் வங்​கி​கள் ஆகியோர் இந்த புதிய நடை​முறை​யின் முக்​கிய பங்​கு​தா​ரர்​களாக உள்​ளனர்.

தற்​போது அளிக்​கப்​படும் பயிற்​சிகளால் பதிவு ஆவணங்​களில் ஏற்​படக்​கூடிய பிழைகள் குறைந்​து, பதிவு செயல்​முறை மிக​வும் சிறப்​பான முறை​யில் நடை​பெற வழி​வகுக்​கும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT