தமிழகம்

ஜிஎஸ்டி தொடர்பான விசாரணைக்கு ‘வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜராகலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்தில் ஜிஎஸ்டி விசாரணைக்கு வணிகர்கள் இனி நேரில் வரத் தேவையில்லை. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜராகலாம்’ என்று வணிகவரித் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

வணிகவரித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் வணிகவரித்துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் எஸ்.நாகராஜன் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வருவாய், ஜிஎஸ்டி அல்லாத பிற வரிகள், நுண்ணறிவுப் பிரிவு, தணிக்கைப் பிரிவு, சட்டப்பிரிவு, மறு ஆய்வு, முறையீடு மற்றும் சீராய்வு உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது: தமிழக வணிகவரித் துறையின் கீழ் இயங்கும் 338 வரிவிதிப்பு வட்டங்களில், மொத்தம் 12.40 லட்சம் வணிகர்கள் ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் தாக்கல் செய்யும் கணக்குகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். இதுவரை 58,000-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மெய்நிகர் முறையில் நேர்காணல்

தற்போது வணிகர்கள் நலன் கருதி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கவும் மேல்முறையீட்டு அலுவலகங்களில் மெய்நிகர்முறையில் நேர்காணல் நடத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தொலை தூரங்களில் உள்ள வணிகர்கள் நேரில் வர வேண்டியதில்லை. அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் வழியாக விளக்கம் அளிக்கலாம். இந்த புதிய முறை 15 மேல்முறையீட்டு அலுவலகங்களிலும் ஜூலை 9 (இன்று) முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

கணினி மூலம் ஒதுக்கீடு

வணிகர்கள் தங்கள் ஏற்றுமதி மற்றும் வியாபார பணப்புழக் கத்துக்காக, தாங்கள் செலுத்திய வரியை திரும்பப்பெற விண்ணப்பிப்பது வழக்கம். கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.5,000 கோடி திருப்புத்தொகை (ரீபண்ட்) வழங்கப்பட்டுள்ளது.

இனிமேல், வணிகர்கள் திருப்புத் தொகை கோரி விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பங்களை எந்த அதிகாரி விசாரிக்க வேண்டும் என்பதை கணினி தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்யும்.

இதன்மூலம் பாரபட்சமின்றி விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, எவ்வித காலதாமதமுமின்றி வணிகர்களுக்கு திருப்புத்தொகை உடனுக்குடன் கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

SCROLL FOR NEXT