

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஒருமாத காலம் தீவிர போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மண்டல ஐஜி-க்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி-க்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8 வரை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
இந்த சிறப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம், சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் போதைப்பொருட்களை அதிக அளவில் பறிமுதல் செய்வதுடன், அவற்றின் உற்பத்தி, கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய வர்களை உடனடியாகக் கைது செய்வதாகும்.
செயல் திட்டம் வழங்கல் இதற்காக விரிவான செயல் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. மண்டல ஐஜி-க்கள் மற்றும் டிஐஜி-க்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணித்து, தினசரி ஆய்வு மேற்கொண்டு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
ஒரு மாத கால சிறப்பு நடவடிக்கையின்போது, ஒவ்வொரு மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையின் செயல்திறன், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு, பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டிஜிபி இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து தொடர்ந்து கண்காணிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ரவுடிகள் மீது நடவடிக்கை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், சரித்திரப் பதிவேடு ரவுடிகள், சரித்திரப் பதிவேடு அல்லாத குற்றவாளிகள், குற்ற குணத்தார் மற்றும் பல்வேறு குற்றச்செயல் களில் தொடர்புடைய தலைமறைவு நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கபோலீஸாருக்கு அறிவுறுத்தப் பட்டது.
அதன்படி, ஜூலை 1 முதல் 7-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 25 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்ற குணத்தார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த 949 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 385 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.