திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் தனது மனைவி சாந்தாவுடன் வாக்களித்த அமைச்சர் கே.என்.நேரு.

 

படம்- ர.செல்வ முத்துகுமார்.

தமிழகம்

“காலையிலேயே ஓட்டாதீங்கப்பா...” - 50 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்த அமைச்சர் கே.என்.நேரு கலகலப்பு

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: “எல்லா இடங்களிலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிப்பதாக சொல்கிறார்கள். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் நிச்சயம் முதல்வராவார்,” என்று திருச்சியில் வாக்களித்தபின் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் வாக்ளித்த பின் திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என் நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவை தந்துள்ளார்கள். காலையில் இருந்து திருச்சியில்  பல இடங்களில் நான் கேட்டபோது, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தான் எங்கள் ஓட்டு என்று பொதுமக்கள் சொல்வதை கேட்க முடிந்தது.

இந்த தேர்தல் எங்களுக்கு சவாலான தேர்தல் எதுவும் இல்லை. நீங்கள்தான் சவால்.. சவால்.. என்று சொல்கிறீர்கள். வரிசையில் நிற்கும் மக்களை பாருங்கள். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. எப்போதும் போலதான் இந்த தேர்தலும் இருக்கின்றது.

 திருச்சியில் ஒன்பது தொகுதிகளிலும் உதயசூரியன் தான் ஜெயிக்கும்.  எல்லாரும் இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கின்றனர். டெல்டா பகுதியில் உதயசூரியனுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும்.

திமுகவில் 200 தொகுதிகள் வெற்றி பெற டார்கெட் நிர்ணயம் செய்யப்பட்டது. அதை நோக்கித்தான் பயணம் செய்கிறோம். 200 தொகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளோம். 

மக்களுடைய ஆதரவும் ஸ்டாலினுக்கு தான் இருக்கிறது. நிச்சயம் திமுக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று அவர் கூறினார்.

காத்திருப்பு: முன்னதாக, தில்லைநகர் மக்கள்மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்கு  நேருவின் குடும்பத்தினர் காலை 7 மணிக்கு வந்து விட்டனர். ஆனால், வாக்களிக்கும் போது காட்டக்கூடிய சின்னம் மாறுபாடாக இருந்ததால் அவர்கள் மெஷினை சரி செய்யும்படி கூறினர். அதையடுத்து எந்திரத்தை சரி செய்யும் பணி நடைபெற்ற காரணத்தினால் சுமார் 50 நிமிடம் அமைச்சர் நேரு வாக்குச்சாவடி முன்பு கால்கடுக்க காத்திருந்தார். அவரது குடும்பத்தினர் வாக்கு சாவடிக்குள் காத்திருந்தனர். இயந்திரம் சரி செய்யப்பட்ட பிறகு அவர் தனது மனைவி சாந்தாவுடன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

கலகலப்பு:  திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, “யாருங்க அது.. இந்த கேள்வி கேட்கிறது..” என்று கேட்ட பின்பு, “திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்” என்றார்.

வழக்கமாக தபால் ஓட்டுகள் திமுகவிற்கு சாதகமாக இருக்கும். இம்முறை இல்லை என்கிறார்களா? என்ற கேள்விக்கு, “அதெப்படி உங்களுக்கு தெரியும் என்று எதிர்கேள்வி எழுப்பிய அவர், "காலையிலேயே ஓட்டாதீங்கப்பா..” என்று கூறி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

SCROLL FOR NEXT