தமிழகம்

மனுவை வாங்க மறுத்த அமைச்சர் கீர்த்தனா - ஓசூர் இளைஞர்கள் அதிருப்தி

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிடம், விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் சார்ந்த திட்ட வரைவு மனுவை அளிக்க வந்த இளைஞர்களை அமைச்சர் சந்திக்காமல் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இன்று ஆய்வு மேற்கொள்ள வந்தார். அப்போது அணையின் தற்போதைய நிலைமை மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கெலவரப்பள்ளி அணையில் பல ஆண்டுகளாக தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுநீர் கலப்பதால் நுரை பொங்கி வழியும் பிரச்சினை தொடர்கதையாக உள்ளது.

இதனால் விளைநிலங்கள் பாழடைவதுடன், கால்நடைகளும், அப்பகுதி மக்களும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான. நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

​இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், ரசாயன நுரையைக் கட்டுப்படுத்தி, விவசாயத்திற்குத் தெளிவான தண்ணீரை விநியோகிப்பதற்கான ஒரு தற்காலிகத் திட்ட வரைவை தயாரித்து வைத்திருந்தனர்.

​அமைச்சரிடம் இந்தத் திட்ட வரைவு மனுவை வழங்கி, பிரச்சினையின் தீவிரத்தை நேரில் விளக்குவதற்காக இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் அணைப்பகுதிக்கு வந்திருந்தனர். அப்போது அமைச்சர் கீர்தனாவிடம் மனு அளிக்க முயன்றனர். மனுவை வாங்க மறுத்த அமைச்சர், இளைஞர்களைப் பொருட்படுத்தாமல் தனது காரின் கண்ணாடியை மூடிக்கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.

​அமைச்சரின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து இந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகி நிருபன் கூறும்போது, “கெலவரப்பள்ளி அணையில் கலக்கும் ரசாயனக் கழிவுநீரால் விளைநிலங்கள் மட்டுமின்றி கால்நடைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. மனிதர்களுக்குப் புற்றுநோய் பரவும் ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது.

​இந்த நுரையைத் தற்காலிகமாகக் குறைத்து, விவசாயத்திற்கு ஓரளவுக்குத் தெளிவான தண்ணீரை அனுப்பக்கூடிய ஒரு எளிய திட்டத்தை நாங்கள் தயார் செய்து வைத்திருந்தோம். ஆய்வு செய்ய வந்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவிடம் இதை வழங்கி விளக்க முயன்றோம். ஆனால், அவர் எங்களைக் கண்டு கொள்ளாமல் கார் கண்ணாடியை உயர்த்திக்கொண்டு சென்றுவிட்டார்.

​பொதுமக்களின் குறைகளைக் கேட்க வேண்டிய ஒரு அமைச்சர், அரசு ஆய்வை ஒரு கட்சி நிகழ்ச்சி போல நடத்திக் கடந்து சென்றது மிகவும் கவலையளிக்கிறது எனக் கூறினார்.

SCROLL FOR NEXT