சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பாதுகாப்பு விருதுகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார். உடன், துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செ.ஆனந்த், தேசிய பாதுகாப்பு குழும தமிழ்நாடு பிரிவு செயலாளர் ராஜ்மோகன் பழனிவேல்.
சென்னை: பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது ஒரு சட்டப்பூர்வ கடமையாக மட்டுமின்றி, தொழில்துறை கலாச்சாரமாக இருக்க வேண்டும் என்று மாநில பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் வலியுறுத்தினார்.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பாதுகாப்பு குழுமம் சார்பில். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாநில பாதுகாப்பு விருதுகள், உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவில், தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி. கணேசன், 196 தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு மாநில பாதுகாப்பு விருதுகள், 122 தொழிலாளர்களுக்கு உயர்ந்த உழைப்பாளர் விருதுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது சட்டப்பூர்வ கடமையாக மட்டுமின்றி, தொழில்துறை கலாச்சாரமாக இருக்க வேண்டும்.
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவு செய்யும் வரை மாதாந்திர பராமரிப்பு தொகை வழங்கும் திட்டம் மூலம் 134 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்ற, 20 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கும் வகையில் ரூ.700 கோடி மதிப்பில் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், தொழிலாளர் நலத்துறை செயலர் கோ.வீரராகவ ராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செ.ஆனந்த். தேசிய பாதுகாப்பு குழும தமிழக பிரிவின் செயலாளர் ராஜ்மோகன் பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.