மதுரை; மதுரை கோரிப்பாளையம் மேம்பாலத்தை பிப்ரவரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என, பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.
மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, ரூ.190.40 கோடியில் தமுக்கம் சந்திப்பு- அண்ணாசிலை சந்திப்பு வரை 12 மீட்டர் அகலம், 2100 மீட்டர் நீளத்தில் 3 வழித்தட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. தமுக்கம் - கோரிப்பாளைம் வரை மெயின் பாலம் பணிகள் முடியும் நிலையில், நேற்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர். ஏவ.வேலு அமைச்சர் பி. மூர்த்தி உட்பட அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சி அமைந்த பிறகு தென்பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக நீண்ட நாள் கோரிக்கையான கோரிப்பாளையம், செல்லூர் பகுதியை இணைக்கும் துணை மேம்பாலம் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார். இதற்காக ரூ.190.40 கோடி நிதி ஒதுக்கி 10.11.23-ல் பணி முதல்வர் தொடங்கி வைத்தார். 24 மாதத்தில் முடித்து இருக்கவேண்டும். வழக்கு காரணமாக 6 மாதம் தள்ளிப் போனது.
இரவு, பகல் பார்க்காமல் பொறியாளர்கள் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். முதல் கட்ட மெயின் பாலப்பணியை முடிக்க, பொறியாளர்கள், ஆட்சியர், அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். நான் 7வது முறை ஆய்வு செய்துள்ளேன். பிப்.10-ம் தேதிக்குள் மெயின் பாலம் பணி முடிந்துவிடும். இதன் பிறகு முதல்வரிடம் இசைவு பெற்று, அவர் நேரில் வந்து மேம்பாலத்தை திறந்து வைப்பார். இதற்காக தற்போது துறை செயலருடன் ஆய்வு செய்துள்ளேன். வைகை ஆற்றுப்பாலத்துடன் இணைந்து மெயின் பாலத்தில் போக்குவரத்து அதிகம் என்பதால் முதலில் திறந்து வைக்கப்படும். செல்லூர் இணைப்பு பாலமும் 3 மாதத்தில் திறக்கப்படும்.
தமிழக முதல்வர் தென்பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏற்கெனவே மேலமடை சந்திப்பு திறக்கப்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதியில் மணிக்கணக்கான போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளதாக எம்எம்ஏக்கள் கோ. தளபதி, பூமிநாதன் தெரிவித்தனர். வைகை வடகரை சாலை இன்னும் முழுமை பெறவில்லை என, அமைச்சர், எம்எல்ஏக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். வைகை தெற்கு வடகரை சாலை முடிந்துள்ளது.
நீண்ட கோரிக்கையான வடகரை சாலை பணியை முடிக்க, 3 கட்ட பணியாக பிரித்து முதல் கட்டமா ரூ.170 கோடியில் சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலை இணைக்க, பணி நடக்கிறது. 2வது கட்டமாக குருவிக்காரன் அண்ணாநகர் சாலை வரை முடிக்க ரூ.29 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக விரகனூர் - சக்குடி வரை 8 கி.மீட்டருக்கு ரூ.128 கோடியில் பணி நடக்கிறது. இந்த 3 கட்ட பணியால் வடகரை சாலை முழுமை பெறும். மதுரை மாநகராட்சி பகுதியில் மட்டும் ரூ. 460 கோடியில் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்துள்ளன.
மேலமடை பாலத்திற்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் வைத்தது போன்று கோரிப்பாளையம் பாலத்திற்கும் பலரும் பாராட்டும் வகையில் சிறப்பான பெயரை வைக்க அமைச்சர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் முதல்வரிடம் வைத்துள்னளர். கோவையில் புதிய ஆற்றுபாலத்திற்கு சி.சுப்பிரமணி, அவிநாசி பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர்களை வைத்துள்ளார். இதன்படி, பாலம் திறக்கும் முன்பே முதல்வர் என்ன எண்ணுகிறாரோ, அப்பகுதியினர் விரும்பும் பெயரை வைப்பார்.
விரகனூர் ரவுண்டானா சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, மேம்பாலம் அமைப்பது குறித்து நெஞ்சாலைதுறையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நிதி ஒதுக்கி பணியை தொடங்குவோம். விரகனூர் ரிங்ரோட்டை தேசிய நெடுஞ்சாலைதுறையிடம் ஒப்படைத்தால் விமான நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கலாம் என்றால் அதுப்பற்றி எதுவும் கடிதம் கொடுக்கவில்லை. சாலைகள் மேம்பாட்டுக்கென NHAI-க்கு இணையாக ‘டான்சாய் ’ என்ற அமைப்பு செயல்படுகிறது.
இதன்மூலம் பெரிய, நீண்ட பாலம், புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை செய்கிறோம். ரிங்ரோட்டை ‘ டான்சாய் ’ மூலம் முடியுமா என பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் விபத்து தடுக்க ,‘பிளாக் பார்ட் ’ பகுதி கண்டறியப்பட்டு அதற்கான தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த ஆண்டு 100 இடங்களில் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. ரிங் ரோடு 3 இடத்தில் டோல் கட்டணம் வசூலிப்பது என்பது டெண்டருக்கு முன்பே விவரம் தெரிவிக்கப்பட்டு டோல் வசூலிக்கப்படுகிறது.
டோல் கட்டணத்தை அரசு வழங்கி, அரசே டோல் கட்டணம் பெறலாம். இருப்பினும், ஒப்பந்த நிறுவனமே குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கட்டணம் வசூலை நிறுத்தும். நான்கு வழிச்சாலையில் வேலம்மாள் அருகே டோலுக்கென நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதை தடுக்க, திட்டம் ஒன்று தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.