பட்டீஸ்வரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் மழையில் நனைந்து கிடந்த நெல் மூட்டைகளை நேற்று பார்வையிட்ட வேளாண்மை துறை அமைச்சர் ஆர்.வினோத்.
கும்பகோணம்: கும்பகோணம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேளாண் அமைச்சர், நெல் மூட்டைகளைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 4.5 லட்சம் டன் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கு நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கிடப்பதாகவும், தார்ப்பாய் கொண்டு நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்கு பணியாளர்கள் முறையாக மூடி வைக்கவில்லை என்றும் கிடைத்த தகவலின் பேரில் வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் நேற்று அங்கு திடீர் ஆய்வுக்குச் சென்றார்.
அப்போது, சேமிப்புக் கிடங்கில் நெல் மூட்டை அடுக்குகளில், தார்ப்பாய்கள் கிழிந்தும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், கீழே கொட்டியும் வீணாகிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களை செல்போனில் அழைத்து, “நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள எத்தனை முறை உங்களுக்கு அறிவுறுத்துவது?” என கடிந்து கொண்டார். மேலும், சேமிப்புக் கிடங்கு பணியாளர்களை அழைத்து, நெல் மூட்டைகளைப் பாதுகாப்பதை விட உங்களுக்கு என்ன வேலை? என கேள்வி எழுப்பினார்.
பின்னர், அமைச்சர் ஆர்.வினோத் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அனைத்து நெல் சேமிப்புக் கிடங்குகளையும் ஆய்வு செய்து, மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, அறிக்கையை அளிக்கவும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள வயல்களை ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்படும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
பணிகள் சிறக்கவே இடமாறுதல்: அமைச்சர் ஆர்.வினோத் கூறும்போது, ‘‘கடந்த காலங்களில் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள நெல்மணிகளைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேக்கமடைந்துள்ள நெல்மணிகளை என்ன செய்வது என்பதற்கான தீர்வுகள், மழைக் காலம் முடிந்தவுடன் செயல்படுத்தப்படும். வேளாண்மை துறைகளில் மட்டும் இல்லாமல், அனைத்து துறைகளிலும், மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாறுதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடமாறுதல் இருந்தால்தான் பணிகள் சிறப்பாக நடைபெறும்’’ என்றார்.