சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 32 பிரிவுகளிலும் புறநோயாளிகள் முன்பதிவு வசதி சேவைகளை வழங்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட நலம் ஏஐ செயலியை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ரூ.15.73 கோடியிலான நவீன மைய சமையற்கூடம், மின்சார வாகனங்கள், நவீன ரத்த சுத்திகரிப்பு மையம், கேத் லேப், சிடி ஸ்கேனர், மேம்படுத்தப்பட்ட எண்டோஸ்கோபி பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தீவிர கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் லோகநாயகி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாரான், மருத்துவமனை நிலைய அலுவலர்கள் அறவாழி, உமாபதி, கல்லூரி துணை முதல்வர் வித்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய்யின் வெளிநாட்டு பயணம் காரணமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொடங்க இருக்கிறோம்.
அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படும். குழந்தைகளுக்கு வழங்கப்படும் தங்க மோதிரம் 916 ஹால்மார்க் முத்திரையுடன் தரமாக இருக்கும். பருவமழை தொடங்குவதால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தி தொடர்ந்து கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். கொசுக்கடியில் இருந்து மக்களை பாதுகாக்க தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உடலில் தடவும் கொசு விரட்டியை சோதனை முறையில் பயன்படுத்த உள்ளோம்.
உணவில் ஒரு கிராம் உப்பை குறைத்தால் 10 சதவீத இதயநோய் மற்றும் 15 சதவீத பக்கவாத நோய் குறையும். இதுதொடர்பாக மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.