சென்னை: தாழ்வான பகுதிகள், மலைகிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் பாதுகாப்பு கருதி பிரசவ நாளுக்கு முன்பாகவே அரசு மருத்துவமனைகளில் சேர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகள், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார துணை மையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.
டெங்கு, எலிக் காய்ச்சல், சிக்குன்குனியா, கடுமையான வயிற்றுப் போக்கு நோய்கள் மற்றும் பிற நீர் மூலம் பரவும் தொற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை மையங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
பொதுமக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்கள் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். வெள்ள நீரில் இறங்கி செல்லக்கூடாது.
மழைக்காலங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். குடிநீரை காய்ச்சி ஆரவைத்து பருக வேண்டும்.
குறிப்பாக, மழைநீர் தேங்க கூடிய தாழ்வான பகுதிகள் மற்றும் மலைக் கிராம பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது பிரசவ நாளுக்கு ஒரு வார காலத்துக்கு முன்பாகவே அரசு மருத்துவமனைகளில் சேர வேண்டும்.