சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ்

 
தமிழகம்

“சுகாதார வசதிகள் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு” - பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் உறுதி

ச.கார்த்திகேயன்

சென்னை: சுகாதார வசதிகள் குறித்து மாவட்ட வாரியாக விரைவில் ஆய்வு நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரைவையில் கேள்வி நேரத்தின்போது, பெரியகுளம் தொகுதி தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் பேசும்போது, “எனது தொகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகளும், மருத்துவர்களும் இல்லை அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், “பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, அனைத்து தொகுதிகளிலும், மாவட்டங்களிலும் சுகாதார வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் அளித்தார்.

அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பேசும்போது, “கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், உயர்சிறப்பு மருத்துவர்கள் இல்லை. கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதி இல்லை" என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், “அரசு மருத்துவமனையில் உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நாம் உயர் சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களை உருவாக்கவில்லை. முதல் முறையாக 285 உயர் சிறப்பு மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கி இருக்கிறோம்.

இதய நோய் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர் பணியிடங்களை உருவாக்கி நியமிக்கப்படும். கூடுதல் செவிலியர்களும் நியமிக்கப்படுவார்கள். கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதியும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

SCROLL FOR NEXT