அமைச்சர் அருண்ராஜ்
சென்னை: தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோக கடந்த திமுக அரசே காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் சீனிவாசன் கல்லூரி ஆகிய இரு கல்வி நிறுவனங்களுக்கும் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு கல்லூரிகளும் திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு தொடர்புடையது. இரண்டு கல்லூரிகளும் தனியார் பல்கலைக்கழகம் என்ற வரையறைக்கு கீழ் வருவதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் இருந்து தடையில்லா சான்று பெறாமலேயே நேரடியாக பல்கலைக்கழக மானிய குழுவுக்கு விண்ணப்பித்து நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ளனர். இதனால், எம்பிபிஎஸ் படிப்பில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பாதிக்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் பறிபோகும்; கல்விக் கட்டணம் பல லட்சமாக உயரும் என்பதை அறிந்தே அந்த கல்லூரியின் நிர்வாகிகள் இத்தகைய செயலை செய்துள்ளனர். இதுதான் அவர்கள் மக்களுக்கு வழங்கும் நியாயமா?
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் அந்தஸ்து பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் தடையில்லா சான்று கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதன் பேரில் 60 நாட்களுக்குள் பல்கலைக்கழகம் முடிவு எடுக்காவிடில் தடையில்லா சான்று அளிக்கப்பட்டதாக கருதப்படும்.
அந்த வகையில், ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி கடந்த ஆட்சியில் தடையில்லா சான்று கோரி விண்ணப்பித்தது. அதனை நிராகரிப்பதாக 60-வது நாளில் முடிவெடுத்து, அதுகுறித்த விவரத்தை 67-வது நாளில்தான் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரியானது தற்போது நிகர்நிலை அந்தஸ்து பெற்றுவிட்டது. இதேபோன்று கற்பக விநாயகா மருத்துவ கல்லூரிக்கு முதல் 60 நாளில் எந்த முடிவும் எடுக்காமல், 90-வது நாளில் தடையில்லா சான்றை பல்கலைக்கழகம் வழங்கியிருக்கிறது. அடுத்த இரு மாதங்களுக்கு பிறகு அதை ரத்து செய்துள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய காலக்கெடுவுக்குள் மேற்கொள்ளப்படாத பல்கலைக்கழகத்தின் எந்த செயலையும் ஏற்கவில்லை. இதனால் அந்த கல்லூரிக்கும் நிகர்நிலை அந்தஸ்து கிடைத்துள்ளது.
இத்தகைய மக்கள் நலனற்ற செயல்கள் காரணமாகவே தற்போது எம்பிபிஎஸ் இடங்கள் குறையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கடந்த திமுக அரசே காரணம் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டுமே மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் விருப்பம். அதனை உறுதி செய்யவே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நிகர்நிலை பல்கலைக்கழக விவகாரத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். தடையில்லா சான்றுக்கு 60 நாள் அவகாசம் அளிப்பது உள்ளிட்ட விதிகளில் திருத்தம் செய்ய ஆலோசித்து வருகிறோம். வரும் காலங்களில் மாநில அரசிடம் தடையில்லா சான்று பெறாமலும், அனுமதி பெறாமலும் எந்த கல்லூரிக்கும் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கக்கூடாது என மத்திய கல்வி அமைச்சரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.