மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா

 
தமிழகம்

சென்னையில் அமைச்சர் அமித் ஷா: உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

பொதுமக்கள் சுற்றுலாவுக்குத் தடை

செய்திப்பிரிவு

சென்னை: தென் மாநில முதல்​வர்​கள் மாநாட்​டில் பங்​கேற்க, மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று சென்னை வந்தார். இதை முன்​னிட்டு உச்ச கட்ட பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. மேலும், பொது​மக்​கள் சுற்​றுலா​வுக்​கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மத்​திய உள்​துறை அமைச்​சகம் சார்​பில், ஆண்​டு​தோறும் தென் மாநில முதல்​வர்​கள் மாநாடு நடத்​தப்​பட்டு வரு​கிறது. தென் மாநிலங்​களுக்​குள் பரஸ்​பரம் ஒத்​துழைப்​பு, வளர்ச்​சியை நோக்​க​மாகக் கொண்டு இந்த மாநாடு நடத்​தப்​பட்டு வந்​தது. எனினும், கடந்த 2022-ம் ஆண்​டுக்​குப் பிறகு இந்த மாநாடு நடை​பெறாமல் இருந்​தது. மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் கீழ் செயல்​படும் தென் மண்டல கவுன்​சில் மாநாடு, கடைசி​யாக 2022 செப்​டம்​பரில் கேரள மாநிலம் திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெற்​றது. அதற்​குப் பிறகு, கடந்த 3 ஆண்​டு​களாக இந்த மாநாடு பல்​வேறு நிர்​வாகக் காரணங்​களாலும், தேர்​தல் மற்​றும் அரசி​யல் சூழல்​களாலும் நடத்​தப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், 31-வது தென் மாநில முதல்​வர்​கள் மாநாடு இன்று சென்​னையை அடுத்த கோவளத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடைபெறு​கிறது. இந்த மாநாட்​டுக்கு மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தலைமை தாங்​கு​கி​றார். இதில் தமிழக முதல்​வர் விஜய், கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார், கேரள முதல்​வர் சதீசன், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பங்கேற்கின்றனர். புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமி பங்​கேற்​பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

தென் மாநில முதல்​வர்​களு​டன் அந்​தந்த மாநில தலை​மைச் செயலர்​கள், உள்​துறை செயலர்​கள் உள்​ளிட்ட உயர் அதி​காரி​களும் மாநாட்​டில் கலந்து கொள்​கின்​ற​னர். மாநிலங்​களுக்கு இடையே​யான ஒத்​துழைப்​பு, பொருளா​தார வளர்ச்​சி, தொழில் முதலீடு​கள், கூட்​டுறவைப் பலப்​படுத்​து​வது, கட்​டமைப்பு மேம்​பாடு, நீர்வள பகிர்​வு, கல்​வி, சுகா​தா​ரம், தகவல் தொழில்​நுட்​பம், பேரிடர் மேலாண்​மை, குற்​றங்​கள் தடுப்​பு, எல்லை பிரச்​சினை​கள் உள்​ளிட்ட பல்​வேறு முக்​கிய விவ​காரங்​கள் குறித்து இந்த மாநாட்​டில் விவா​திக்​கப்​படு​கிறது.

தற்​போது காவிரி நீர் பங்​கீடு விவ​காரத்​தில் தமி​ழ​கம் மற்​றும் கர்​நாடகம் இடையே முரண்​பாடு​கள் எழுந்​துள்ள நிலை​யில் இந்த கூட்​டம் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக கருதப்​படு​கிறது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் இந்த மாநாட்டில் நேரில் சந்திக்க உள்ளனர். அப்போது காவிரி விவகாரம் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முதல்வர் பதவியேற்ற பிறகு அமைச்சர் அமித் ஷாவை முதல் முறையாக விஜய் சந்திக்க உள்ளார்.

இந்த மாநாட்​டில் பங்​கேற்க மத்​திய அமைச்​சர் அமித் ஷா நேற்று இரவு 9.10 மணிக்கு சென்னை வந்​தடைந்​தார். சென்னை விமான நிலையத்திலிருந்து காரில் கோவளம் சென்​றார். அங்கு தனி​யார் ஓட்​டலில் இரவு தங்​கி​னார். இன்று காலை தென் மாநில முதல்​வர்​கள் மாநாட்​டைத் தொடங்கி வைத்து உரை​யாற்​றுகி​றார். பின்​னர் பிற்​பகல் 3.30 மணி​யள​வில் அவர் டெல்லி புறப்​பட்​டுச் செல்​கி​றார்.

மாநாட்டை முன்​னிட்டு கோவளம் பகு​தி​யைச் சுற்றி 3-அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. டிஜிபி மகேஷ் குமார் நேரடி மேற்​பார்​வை​யில் ஆயிரக்​கணக்​கான போலீ​ஸார், மோப்ப நாய் மற்​றும் வெடிகுண்டு கண்​டறி​யும் பிரி​வினர் தீவிர சோதனை​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

மாநாடு நடை​பெறும் தனி​யார் நட்​சத்​திர ஓட்​டல் மற்​றும் கிழக்​குக் கடற்​கரை சாலை (இசிஆர்) பகு​தி​களில் ட்ரோன்​கள் மற்​றும் சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் 24 மணி நேர தீவிர கண்​காணிப்பு மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. கடலோரக் காவல் படை மற்​றும் கடலோரப் பாது​காப்​புக் குழும போலீ​ஸார் படகு​கள் மூலம் கடல் வழி​யிலும் கண்​காணிப்​பைத் தீவிரப்​படுத்தி உள்​ளனர். மாநாட்​டுப் பகு​தி​கள், விமான நிலை​யம் முதல் ஈசிஆர் வரையி​லான பாதைகளில் போக்​கு​வரத்து மாற்​றங்​களும், விஐபி வாக​னங்​களுக்​குப் பிரத்​யேக பாது​காப்பு வழித்​தடங்​களும் அமைக்​கப்​பட்​டுள்​ளன. நிகழ்ச்சி நடை​பெறும் பகுதி சிகப்பு மண்​டல​மாக அறிவிக்​கப்​பட்டு ட்ரோன்​கள், ராட்சத பலூன்​கள் பறக்க தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

அமைச்​சர் அமித் ஷா வரு​கையை முன்​னிட்டு இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை​யில் சுற்​றுலாப் பயணி​களுக்கு மாமல்​லபுரத்​தில் கலைச் சின்​னங்​களைக் காண அனு​ம​தி​யில்லை என்று தொல்​லியல் துறை தெரி​வித்​துள்​ளது. மேலும், மாமல்​லபுரத்​தைச் சுற்​றி​யுள்ள பகு​தி​கள் பாது​காப்​புத் துறை​யினரின் முழு பாது​காப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT