மேட்டூரை அடுத்த குள்ளவீரன்பட்டி பகுதியில் நடைபெறும் இரும்புத் தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணி.
மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்வர் விஜய் நாளை (1-ம் தேதி) தண்ணீர் திறந்து வைக்க உள்ள நிலையில், அணை மற்றும் மேட்டூர் நகரப் பகுதிகளில் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல்வர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு செல்கிறார். தொடர்ந்து, அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைக்கிறார். இதையொட்டி, அணையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வரும் வழிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், முக்கியச் சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் மேட்டூர் நகரப் பகுதிகளில் இரும்புத் தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றங்கள், வாகன நிறுத்துமிடங்கள், காவல் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி தலைமையில் ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள் உள்ளிட்ட 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 6,887 கனஅடியாக இருந்த நிலையில், மாலை 9,035 கனஅடியாக அதிகரித்தது குடிநீருக்காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 90.47 அடியாகவும், நீர்இருப்பு 53.19 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 10,000 கனஅடியாக அதிகரித்தது.