மேட்டூர்/ தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,148 கனஅடியாக சரிந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 8,993 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 6,148 கனஅடியாகக் குறைந்தது.
அணையிலிருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கனஅடி நீரும் குடிநீருக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 91.92 அடியாகவும், நீர்இருப்பு 54.87 டிஎம்சியாகவும் இருந்தது.
இதனிடையே ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 9,000 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 7,500 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.