தமிழகம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,000 கனஅடியாக சரிவு

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

செய்திப்பிரிவு

மேட்டூர்/ தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,808 கனஅடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18,875 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று காலை 10,808 கனஅடியாகக் குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு, வெளியேற்றப்படும் நீரின் அளவைவிட அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.03 அடியாகவும், நீர் இருப்பு 40.02 டிஎம்சியாகவும் இருந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றிலும் தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக பதிவான நீர்வரத்து,மாலையில் 9,500 கனஅடியாகவும், நேற்று காலை 6,000 கனஅடியாகவும் படிப்படியாக குறைந்தது.

கடந்த 4-ம் தேதி நீர்வரத்து உயர்வு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் 4 நாட்களாக இந்த தடை அமலில் இருந்த நிலையில், நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாகக் குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கமாவட்ட ஆட்சியர் சரவணன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT