சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-வது வழித்தடத்தில், மாதவரம் நெடுஞ்சாலை நிலையத்தில் இருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரை (மேல்பாதையில்) சுரங்கப்பாதை பணியை “நீலகிரி” டிபிஎம் இயந்திரம் வெற்றிகரமாக முடித்து, இலக்கை அடைந்தது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. சுரங்கப்பாதை பணி, உயர்மட்டப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையப் பணி உட்பட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இவற்றில், மாதவரம் பால்பண்ணை - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இப்பணிக்காக மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் (டிபிஎம்) பயன்படுத்தப்படுகின்றன. இதில், நீலகிரி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான (மேல் பாதையில்)பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியை கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கியது.
மொத்தம் 819 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியை நேற்று முன்தினம் முடித்து, மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வின்போது, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் கொள்ளி வெங்கட ரமணா (சுரங்கப் பாதை), பொது ஆலோசகர் குழுவின் முதன்மை வரைபடப் பொறியாளர் பிஎஸ்எஸ் நாயுடு, டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் விஜய குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாதவரம் நெடுஞ்சாலை முதல் மூலக்கடை வரையிலான சுரங்கப் பாதை பகுதி பெரிய சவால்கள் நிறைந்ததாக அமைந்தன.
குறிப்பாக, நீலகிரி சுரங்கம் தோண்டும் இயந்திரம், பக்கிங்ஹாம் கால்வாயின் அடியிலும், வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையின் அடியிலும் வெற்றிகரமாகப் பாதையை அமைத்தது’’ என்றனர்.