சென்னை: வடபழனியில் இருந்து தி.நகர் பனகல் பூங்கா வரை ரயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வடபழனி - தி.நகர் பனகல் பூங்கா வரையிலான பணிகளை முடித்து, அடுத்த ஆண்டு ஜூலையில் ரயில் சேவையை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இரு மார்க்கமாக மொத்தம் 8 கி.மீ தொலைவு கொண்ட இப்பாதையில் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ், கோடம்பாக்கம் மற்றும் பனகல் பூங்கா ஆகிய நிலையங்கள் அமைகின்றன.
தற்போது வரை தலா இரண்டேகால் கி.மீ. தொலைவுக்குத் தண்டவாளப் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. முதற்கட்டமாக ஆற்காடு சாலையில் பணிகள் முடிக்கப்படும்.
குறிப்பாக, பனகல் பூங்கா நிலையத்தில் 6 நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகின்றன.
சேவை நேரம் மாற்றம்
பூந்தமல்லி புறவழிச்சாலை – போரூர் சந்திப்பு வழியாக வடபழனி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில், நாளை (நவ. 24) முதல் காலை நேர மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.