மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினரைக் கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸார்.

 
தமிழகம்

மேகேதாட்டு விவகாரம்: அத்திப்பள்ளியில் மறியலுக்கு முயன்ற கன்னட அமைப்பினர் 65 பேர் கைது

தமிழக எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: தமிழக - கர்​நாடக மாநில எல்​லை​யான அத்​திப்​பள்​ளி​யில் சாலை மறியலில் ஈடு​பட்ட கன்னட அமைப்​பினர் 65 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இதனால், தமிழக வாக​னங்​கள் ஓசூர் அருகே நிறுத்​தப்​பட்​டன.

கர்​நாடக மாநிலம் மேகே​தாட்​டு​வில் அணை கட்ட வலி​யுறுத்​தி​யும், தமிழக அரசைக் கண்​டித்​தும் தமிழக - கர்​நாடக மாநில எல்​லை​யான அத்​திப்​பள்​ளி​யில் நேற்று சாலை மறியல் போராட்​டம் நடத்​தப்​படும் என்று கன்னட அமைப்​பினர் அறி​வித்​திருந்​தனர். இதனால், ஓசூரில் இருந்து பெங்​களூரு​வுக்கு 60 சதவீத அரசு பேருந்​துகள் மட்​டுமே நேற்று காலை இயக்​கப்​பட்​டன. மதி​யம் 12 மணி முதல் தமிழக அரசு பேருந்​துகள் அனைத்​தும் நிறுத்​தப்​பட்​டன.

மதி​யம் 1 மணி​யள​வில் கன்னட சலு​வாளி வாட்​டாள் பக் ஷா கட்​சித் தலைவர் வாட்​டாள் நாக​ராஜ் தலை​மை​யில், கன்னட ரக் ஷண வேதிகே உள்​ளிட்ட கன்னடஅமைப்​பினர் கர்​நாடக மாநில எல்​லை​யான அத்​திப்​பள்​ளி​யில் இருந்து பேரணி​யாக வந்து தமிழக எல்​லை​யில் சாலை மறியலில் ஈடுபட முயன்​ற​னர். அங்கு பாது​காப்​புப் பணி​யில் இருந்த கர்​நாடக போலீ​ஸார் அவர்​களைத் தடுத்து நிறுத்​தினர். இதையடுத்​து, பெங்​களூரு தேசிய நெடுஞ்​சாலை​யில் முற்​றுகை​யிட்டு கோஷமிட்டனர்.

இதுகுறித்து வாட்​டாள் நாக​ராஜ் கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை கட்​டும் திட்​டத்​துக்கு எதி​ராக தமி​ழ​கத்​தில் தேவை​யின்றி போராட்​டங்​கள் நடத்​தப்​படு​கின்​றன. மேகே​தாட்டு அணை கட்​டப்​படு​வ​தால் தமி​ழ​கத்​துக்கு என்ன பாதிப்பு என்​பது குறித்து தமிழக அரசு தெளி​வான காரணம் எதை​யும் தெரிவிக்​க​வில்​லை.

தமிழக எல்லையான ஜுஜுவாடியில் நிறுத்தப்பட்ட தமிழக வாகனங்கள்.

அணை கட்​டு​வதன் மூலம் சேமிக்​கப்​படும் நீர், மின் உற்​பத்​திக்​கும் பெங்​களூரு மக்​களின் குடிநீர்த் தேவைக்​கும் மட்​டுமே பயன்​படுத்​தப்​படும். மீத​முள்ள நீர் வழக்​கம் போல் தமி​ழ​கத்​துக்​குத் திறந்து விடப்​படும். எங்​கள் கோரிக்​கை​களை வலி​யுறுத்தி ஆக.13-ம் தேதி கர்​நாடக மாநிலத்​தில் ‘பந்த்’ நடத்த அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

தமி​ழ​கத்​தில் மேகே​தாட்டு அணைத் திட்​டத்​துக்கு எதி​ரான போராட்​டங்​கள் தொடர்ந்​தால், கர்​நாடகத்​தில் தமிழ்த் திரைப்​படங்​களைத் திரை​யிட முழு​மை​யாகத் தடை விதிக்க நேரிடும். மேலும், சென்னை தலை​மைச் செயல​கம் முன்பு சத்​தி​யாகிரகப் போராட்​டம் நடத்​தப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தொடர்ந்​து, வாட்​டாள் நாக​ராஜ் உள்​ளிட்ட கன்னட அமைப்​பு​களைச் சேர்ந்த 65 பேரைப் போலீ​ஸார் கைது செய்​தனர். போராட்​டம் காரண​மாக மதி​யம் 1 மணி முதல் தமி​ழ​கப் பதிவெண் கொண்ட வாக​னங்​கள் தமிழக எல்​லை​யான ஜுஜு​ வாடி​யில் நிறுத்​தப்​பட்​டன. மதி​யம் 1.45 மணிக்​குப் பிறகு தமி​ழ​கத்​தில் இருந்து கர்​நாடகாவுக்கு வழக்​கம் போல் வாக​னங்​கள் இயக்​கப்​பட்​டன.

SCROLL FOR NEXT