தமிழகம்

“மேகேதாட்டு விவகாரத்தை கர்நாடக முதல்வருடன் நட்பு ரீதியாக பேசித் தீர்க்க வேண்டும்” - பேரவையில் பிரேமலதா கோரிக்கை

வெற்றி மயிலோன்

சென்னை: “மேகேதாட்டு விவகாரத்தை தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வருடன் நட்பு ரீதியாக பேசித் தீர்க்க வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக எதிர்கொண்டு இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வினை ஏற்படுத்த வேண்டும்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய பிரேமலதா, “சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆளுநர் உரை தமிழ்த் தாய் வாழ்த்தோடு தொடங்கியதை வரவேற்கிறேன். அதேபோல ஆளுநர் உரை ஆளும் கட்சியின் உரையாக இருந்தது. ஆளுநரின் 37 நிமிட உரை முழுவதும் ஆளும் தவெக அரசுக்கு ஆதரவாக மட்டுமே எழுதப்பட்டிருந்தது. 37 நிமிட உரையில் தமிழ் உச்சரிப்பில் 37 தவறுகள் இருந்தன, இது வேதனையானது. நமது தலைவர்களின் பெயரை சொல்லும் போது அத்தனை தவறுகள் இருந்தது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் யாரும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இப்போது புதியவர்கள் முதல்வர்களாக பொறுப்பேற்றுள்ளனர். எனவே, மேகேதாட்டு விவகாரத்தை தமிழக முதல்வர் கர்நாடக முதல்வருடன் நட்பு ரீதியாக பேசித் தீர்க்க வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக எதிர்கொண்டு இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சுவாரஸ்யப் பேச்சு:

பிரேமலதா பேசும்போது, “சட்டப்பேரவையில் சில்வர் டம்ளர்களில் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வழங்க வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், “கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. அப்படி வழங்கினால், கோபம் வரும்போது தூக்கி எறியவும் வாய்ப்புள்ளது.” என்றார். அப்போது குறுக்கிட்ட திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, “ஓபிஎஸ் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இதைப் பேசுகிறாரா என்பதை அறிய விரும்புகிறேன்” எனத் தெரிவித்ததும் அவையில் சிரிப்பலை நிலவியது.

SCROLL FOR NEXT