

சென்னை: “மகாராஷ்டிராவில் விவசாயிகளின் எல்லா கடனையும் தள்ளுபடி செய்துள்ளார்கள். தமிழகத்திலும் அவ்வாறே கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் ஒரு வருடத்தில் வாங்கிய கடனை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள். அதற்கு முந்தைய ஆண்டுகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என பாமக சட்டப்பேரவைக் குழு தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய பாமக சட்டப்பேரவைக் குழு தலைவர் சவுமியா அன்புமணி, “ஒரு அறையை எந்தப் பொருளை கொண்டு வேண்டுமானாலும் நிரப்பலாம். ஆனால் அந்த அறையில் ஒரு விளக்கை ஏற்றிவைத்தால் போதும், அதன் ஒளியில் அறையே நிரம்பிவிடும். அப்படிப்பட்ட நிகழ்ச்சியையே ஆளுநர் உரையில் நான் பார்த்தேன்.
சமூக நீதி சர்வே நடத்தப்படும் என்ற அந்த ஒரு வாக்கியம், இந்த சட்டப்பேரவையை மட்டும் ஒளிபெற செய்யவில்லை. தமிழக மக்களின் அனைத்து இல்லங்களிலும் வெளிச்சத்தை கொடுத்தது. 100 ஆண்டுகளுக்கு பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அந்த வாக்கியம் வரலாற்று சிறப்பு மிக்கது.
சமூக நீதி சர்வே நடத்தப்படுவதால் தமிழகத்தின் அனைத்து இல்லங்களுக்கும் எல்லா நலத்திட்டங்களும் சென்று சேரும். வேளாண் குடிமக்கள் மட்டும் வெயில், மழை, வெள்ளக் காலங்களில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். பல சிரமங்களை தாண்டியே விவசாயிகள் நமக்கு உணவை அளிக்கின்றனர். விவசாயிகள் பயிர் செய்வதற்காக தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் என எல்லா இடங்களிலும் கடன் வாங்கி விவசாயம் செய்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் விவசாயிகளின் எல்லா கடனையும் தள்ளுபடி செய்துள்ளார்கள். தமிழகத்தில் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 3-ல் 2 பேர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்கிறார்கள். 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியவர்கள் கூட வெளிநாட்டில் வசதியாக வாழ்கிறார்கள். ஆனால், ரூ. 10 ஆயிரம் கடனுக்காக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 2021, 22, 23ம் ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அப்படியானால், ஒரு நாளைக்கு இரு விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என புள்ளிவிவரம் சொல்கிறது.
இப்போது கடுமையான வறட்சியை தரக்கூடிய சூப்பர் எல் நினோ வரப்போகிறது. அதற்கு தயாராக இருக்க வேண்டும். விவசாயிகள் 100 அடி ஆழ பள்ளத்தில் உள்ளனர். ஆனால், அரசு அவர்களுக்கு 50 அடிக்கே கயிறு கொடுத்துள்ளது. அவர்களால் எப்படி வெளியே வர முடிய வேண்டும். நிதிச்சுமை, கடன் சுமை, கூடுதல் செலவீனம் என அதிகாரிகள் சொல்வார்கள். அதனையெல்லாம் ஒதுக்கிவைத்து முழுமையாக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
2 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடியை ரூ.6 ஆயிரம் கோடியாக உயர்த்தியுள்ளீர்கள். ஆனால், ரூ.18 ஆயிரம் கோடியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல விவசாயிகள் ஒரு வருடத்தில் வாங்கிய கடனை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள். அதற்கு முந்தைய ஆண்டுகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் செய்வோருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீது கை வைப்பவர்களுக்கு உயிர் பயத்தை காட்ட வேண்டும். தருமபுரியில் ஒரு நபருக்கு ஒரு குடம் குடிநீர் கூட இல்லை. எனவே தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தருமபுரியில் சிப்காட் அமைக்க வேண்டும்” என்றார்.