சென்னை: முதல்வர் விஜய் தனது செயல்பாடுகள் மூலம் இந்துக்களுக்கு மிகப்பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளார் என்கிறார் ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ்.
இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படாமல் இருந்த 29 திருமண மண்டபங்கள், 17 வணிக வளாகங்கள் என மொத்தம் ரூ.245 கோடி மதிப்புள்ள 46 கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் முதல்வர் விஜய் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் இந்துக்களுக்கு மிகப்பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக வலைதளப் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் டி.ஆர்.ரமேஷ். தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களின் நிதி ஆதாரம், வரவு - செலவு கணக்குகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளை இவர் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க் காக பேசியபோது, அவர் மேலும் கூறியதாவது: ‘இனிவரும் காலங்களில் கோயில் நிதி புனிதமான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். அறநிலையத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற நிர்வாக குளறுபடிகள் சரிசெய்யப்படும்’ என்ற ஆளுநர் உரை மூலமாக, முதல்வர் விஜய்யின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.
கோடி கோடியாக உள்ள கோயில் நிதியைப் பாதுகாக்க கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நீதிமன்றப் படியேறிப் போராடிய எங்களைப் போன்ற சிலருக்கு மட்டுமே இது எவ்வளவு பெரிய முன்னேற்றம் என்பது தெரியும். குறைவாகப் பேசி அதிகமாக செயல்படுபவரே சிறந்த தலைவர். அந்த வகையில், சிறந்த செயல் வீரராகத் திகழ்கிறார் முதல்வர் விஜய் . அவர் எடுத்துள்ள இத்தகைய நேர்மறையான நடவடிக்கைகளை மனதாரப் பாராட்டியே ஆகவேண்டும்.
தமிழக கோயில்களைப் பொருத்தவரை கடந்த திமுக ஆட்சிக் காலம் என்பது ஒரு கெட்ட கனவைப் போன்றது. கோயில் நிதியை தவறாகப் பயன்படுத்தி திட்டங்கள் என்ற பெயரில் எப்படியெல்லாம் செலவழிக்க முடியுமோ அதைத்தான் திமுக ஆட்சியாளர்கள் செய்தனர்.
கோயில் நிதியைப் பயன்படுத்தி வணிக ரீதியாக கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கடந்த 2025 ஜூன் 19-ம் தேதி தடை உத்தரவு பெற்றேன். அந்த உத்தரவை கடந்தகால திமுக அரசு மதிக்கவும் இல்லை; அதை செயல்படுத்தவும் இல்லை.
நன்கொடையாக, காணிக்கையாக சிறுகச் சிறுகச் சேர்ந்த கோயில் நிதியை ஒரே நாளில் காலி செய்யும் விதமாக அறநிலையத் துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு சட்டவிரோத அறிவிப்புகளை வெளியிட, அதற்கெல்லாம் தலையாட்டும் வகையில் துறை ஆணையரும், செயலரும் சேர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தவறான அரசாணைகளை வெளியிட்டனர். திமுக அரசின் சட்ட அதிகாரமற்ற அறிவிப்புகளை தூக்கி சுமந்த அறநிலையத் துறை அதிகாரிகள் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தொகுதி என்பதற்காக கொளத்தூரில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து கல்லூரியைத் தொடங்கி பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளனர். அந்த கல்லூரிகூட அவசர கதியில் தொடங்கப்பட்டு தனியார் பள்ளியில் இயங்கியது. இதேபோல பல்வேறு இடங்களில் கோயில் நிதியில் இருந்து கல்லூரிகளைத் தொடங்கியதால், அதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தோம்.
வெறும் சட்டப்பேரவை அறிவிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கோயில்களில் இருந்து எடுக்கப்பட்ட பணம், சட்டத்தின் முன்பாக திருடப்பட்ட கோயில் பணம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆண்டுதோறும் கோயிலின் நிகர வருமானத்தில் 25 சதவீதத்தை தனியாகப் பிரித்து, கோயில் கட்டுமானத்தைப் பாதுகாக்கவும், சீரமைக்கவும் ஒரு நிதியம் உருவாக்க வேண்டும் என அறநிலையத் துறை சட்டப் பிரிவு 86சி கூறுகிறது. ஆனால், கடந்த 40-50 ஆண்டுகளாக இவ்வாறு வருமானத்தில் 25 சதவீதத்தை எந்த கோயிலிலும் சேமித்து வைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
பொது சுகாதாரம், வருடாந்திர கோயில் செலவுகள், அர்ச்சகர்களுக்குரிய பயிற்சி உள்ளிட்ட செலவினங்கள் நீங்கலாக எஞ்சிய உபரி நிதியில் அறங்காவலர்கள் விருப்பப்பட்டால் ஆணையரின் அனுமதி பெற்று குறிப்பிட்ட சதவீதத்தை வேத ஆகமப் பாடசாலை, மருத்துவமனை, இந்து மதம் சார்ந்த பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ஆதரவற்றோர் விடுதிகள் தொடங்கப் பயன்படுத்தலாம்.
இந்த நற்பணிகளை செய்வதாக இருந்தாலும் விண்ணப்ப விவரங்களை அறநிலையத் துறை ஆணையர் பிரபல நாளிதழ்களில் விளம்பரம் செய்து ஆட்சேபம் ஏதும் உள்ளதா என விசாரணை நடத்தி அதன்பிறகே அனுமதி அளிக்க முடியும். இவ்வாறு கோயில் நிதியைப் பாதுகாக்க, செலவு செய்ய அறநிலையத் துறை சிறப்பான சட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனால், கடந்தகால ஆட்சியாளர்கள் இதை முறையாக அமல்படுத்தவில்லை.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துவிட்டது. இந்த விஷயத்தில் மதத்துக்கு அப்பாற்பட்டு எந்த இஸ்லாமியருக்கும் எதிர்மறையான எண்ணங்கள் இருப்பதாக தெரியவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவே இறுதியானது என்ற அடிப்படையில், அதை செயல்படுத்த முடியாது என்று கூற யாருக்கும் அதிகாரம் கிடையாது. அவ்வாறு கூறினால், அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.
அமைச்சர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதை முதல்வர் விஜய்யின் கருத்தாகவோ, அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் கருத்தாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. மொத்தத்தில் அறநிலையத் துறையில் நேர்ந்த கடந்தகால துன்பங்கள் இனி இந்த ஆட்சியில் இருக்காது என்பது மகிழ்ச்சியே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.