சென்னை: அரசியல் கட்சிகள் சார்பில் மே தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகங்களில் செங்கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திமுக சார்பில் மே தின விழா சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் கொண்டாடப்பட்டது. இதில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, அங்குள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சி.வி.கணேசன், ஆர்.ராஜேந்திரன், மேயர் ஆர்.பிரியா, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், பூச்சி முருகன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி தலைமையில் மே தின விழா நடந்தது.
கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செங்கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் என்.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மே தின விழாவில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மே தின செங்கொடியை ஏற்றினார்.
நிகழ்ச்சியில் மத்தியக் குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.சுகந்தி, வெ.ராஜசேகர், வில்சன். கே.சரவணன், சிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மே தினத்தையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மே தின கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பில் வளசரவாக்கத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் உழைப்பாளர் விழா கொண்டாடப்பட்டது.
தமாகா சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மே தின உறுதிமொழியேற்பு கூட்டம் நடந்தது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட மே தின வாழ்த்துச் செய்தியில், ``சமதர்மம், சமூகநீதி, சமத்துவம் அடிப்படையில் உண்மையில் உழைப்போருக்கு இந்த ஜனநாயக நாட்டில் உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ``காடு திருத்தி நாடாக்கியது உழைப்பு, உண்ணத் தந்து உயிர்கொடுப்பது உழைப்பு, உலக மாந்தரை ஒன்றாக்கியது உழைப்பு, உழைப்பு இல்லையேல் உயிர் இல்லை உயர்வில்லை உழைப்பையே மூச்சாய் கொண்ட உழைப்பாளருக்கு என் வணக்கம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.