சென்னை: கம்யூனிசத்துக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அரசுக்கு எதிரான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வந்தன.
இதனிடையே, தமிழகத்தில் இடதுசாரி அரசியலை வலுப்படுத்தும் வகையில் ’இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு’ என்ற குழுவை உருவாக்கின.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) இணைந்து நடந்து முடிந்த இடைத்தேர்தலில் களம் கண்டன. இருப்பினும், டெபாசிட் இழந்து தோல்வியை சந்தித்தன.
இதனை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: இடைத்தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான வெறுப்பு, எதிர்ப்பு, ஒவ்வாமை, நட்பு, நலன் என பல விதங்களிலும் கருத்துக்களும், அறிவுரைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்போம்.
கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம். கம்யூனிசத்துக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை. அழிக்கவும் முடியாது. இவ்வாறு அவர் பதிவிடப்பட்டுள்ளார்.