சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிசா, வங்காளம், மராட்டியம் ஆகிய செம்மொழிகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கு தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது பொருத்தமானது.
இந்த விருதுகளை தேர்வு செய்ய சுயேச்சை தன்மை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், பல்வேறு மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சிறப்பானது.
அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துவதும், அங்கீகரிப்பதுமே இந்திய ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.