சென்னை: பாஜக, திமுக, அதிமுக கூட்டு எனும் கொள்கை புடலங்காய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எப்போதும் இல்லை என திமுகவின் விமர்சனத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பதிலடி கொடுத்துள்ளது தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
இதையடுத்து, ‘திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது’ என்று திமுக தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், ‘புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில், கட்சி இதழில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கட்டுரை எழுதி இருந்தார்.
அதில், “தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதை தடுத்திருக்கிறோம். திமுக ஆதரவுடன் அதிமுக கூட்டணி ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, பெ.சண்முகத்தின் கட்டுரையை விமர்சித்து, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு நேற்று கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், “குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து விடும், தேர்தல் வந்து விடும் என்பதெல்லாம் உலகப் பம்மாத்து.
சண்முகத்தின் உண்மையான நோக்கம், திராவிடக் கட்சி இல்லாத ஆட்சி அமைய ஆதரவு என்பது தான். அதனால்தான் தவெக ஆட்சியை விழுந்தடித்து போய் ஆதரித்துள்ளோம் என்பதை சண்முகமே கக்கி விட்டார்.
144 உறுப்பினர்கள் ஆதரவுடன் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்து விட்டார். இதில், அதிமுகவைச் சேர்ந்த 25 உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. அதிமுக தயவுடன் அமைந்துள்ள ஆட்சியை ஆதரிப்பது சண்முகத்துக்கு கேவலமாக தெரியவில்லையா? சி.வி.சண்முகமும் பெ.சண்முகமும் ஒரே நேர்கோட்டில்தான் நிற்கிறார்கள்.
கொள்கைப் புடலங்காய் ஏதுமில்லை” என கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில், அந்த கட்டுரைக்கு எதிர்வினையாற்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எப்போதும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.