விபத்தை ஏற்படுத்திய கார்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரக்கோட்டை பிரதான சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவர்கள் மீது கார் மோதியதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் காரக்கோட்டை யோகேஸ்வரன், ரஷித், மற்றும் ராஜமுரளி என்று அடையாளம் தெரியவந்துள்ளது. மூவருமே12 வயது நிரம்பிய சிறுவர்கள். இவர்கள் மூவருமே அரசுப் பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு படித்துவந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கார் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில், ‘இன்று மாலை பள்ளி முடிந்ததும் வழக்கம்போல் மாணவர்கள் காரக்கோட்டை பிரதானச் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த கார் மாணவர்கள் மீது மோதியுள்ளது. காரை ஓட்டிவந்த உலகநாதன் (51) அஜாக்கிரதையாகவும் கவனக் குறைவாகவும் வாகனத்தை இயக்கி மாணவர்கள் மீது மோதியுள்ளார். அதில், 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தின்போது கார் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
தகவல் கிடைத்ததும், வடுவூர் காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்திற்குச் சென்று, கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த நிலையில் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.