சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: சத்தியமூர்த்தி பவனில் 78 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் முழு நாள் ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
கட்சியின் அமைப்பு ரீதியான நிலை மற்றும் மாற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும். தமிழகத்தில் 59 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் ஆட்சியில் பங்கு பெற்று, அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளோம். எங்களது இரண்டு அமைச்சர்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு காங்கிரஸ்காரனின் மரியாதையையும் உயர்த்தும்.
காங்கிரஸில் எந்தவொரு உட்கட்சிப் பூசலோ அல்லது தனித்தனி அணிகளோ கிடையாது. இங்கு இருப்பது ஒரே ஒரு அணிதான், அது ராகுல் காந்தியின் அணிதான். கொள்கைகளைத் தெளிவாக, தைரியமாக எடுத்துச் சொல்வோம்.
சீண்டுபவர்களுக்கு அதே வேகத்தில் பதில் சொல்லவும் தயங்க மாட்டோம். மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண்போம்.
இன்னும் 3 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வரும் என்று எதிர்க்கட்சியினர் கூறுவது, தேர்தலில் தோற்ற அதிர்ச்சியால் பேசும் வார்த்தைகள். எந்தத் தேர்தல் வந்தாலும் எங்கள் கூட்டணிதான் ஜெயிக்கும்.
பழனிசாமியை முதல்வராக்க ஸ்டாலின் முயன்றதாகக் கூறப்படும் பஞ்சாயத்துகளுக்குள் நான் போக விரும்பவில்லை. அதேபோல், அண்ணாமலைக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றது குறித்தோ, கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் குறித்து முரசொலி வைக்கும் விமர்சனங்கள் குறித்தோ காங்கிரஸ் கவலைப்படவில்லை.
இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடன், யார் யார் ‘அண்டர்கிரவுண்ட் கூட்டணி’ வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.