மணிக்கம் தாகூர் | கோப்புப்படம் 
தமிழகம்

"அண்ணாமலை கூறுவதுபோல் முதல்வர் விஜய் செயல்பட முடியாது" - மாணிக்கம் தாகூர்

என்.சன்னாசி

மதுரை: "அண்ணாமலையைப் போல பிழைப்பின்றி புதுக்கட்சி தொடங்கவில்லை. மரணிக்கும் வரை காங்கிரசில் இருப்பேன்” என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ளது நல்ல முடிவு. முதல்வர் விஜய் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் நிலையை பற்றி கூறியிருந்தோம். காங்கிரஸிலிருந்து விலகி நான் தவெகவில் இணைந்து விடலாம் என, அண்ணாமலை கூறுகிறார்.

பாஜக, இந்து முன்னணி, அண்ணாமலை அனைவரும் ஒரே பாணியில் பேசுகின்றனர். அவர் திருப்பரங்குன்ற விவகாரத்தில் தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். 300 ஆண்டாக தீபம் ஏற்றப்படுகிறது. அண்ணாமலை முகமூடி கீழே விழுந்து விட்டது. நான் காங்கிரஸ் கொள்கையினால் மரணிக்கும் வரை அக்கட்சியில்தான் பயணிப்பேன்.

அண்ணாமலையை போன்று பிழப்பின்றி கட்சி தொடங்கப் போகிறேன் என, சீன் போட்டு திமுகவுடன் சைடு டீலிங் பேசிய பிழைப்பை நான் பிழைக்கவில்லை. நான் மானத்துடன் வாழ்கிறேன். தமிழ்நாடு அரசு எடுத்த முடிவுக்கு ஆதரவு கொடுப்பதுதான் எனது வேலை.

முதல்வர் ஏதேனும் ஒரு பக்கம் நிற்க வேண்டுமென அண்ணாமலை கூறுவது போன்று நிற்க முடியாது. அண்ணாமலை ஒரு வேஸ்ட் பீஸ். கட்சியில் இருந்து தூக்கி விட்டனர். அவர் கட்சியில் இருந்தபோது பேசிய பேச்சுகளை பாருங்கள். என்னை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி கிடையாது, நான் பல கட்சி பரந்தாமன் கிடையாது.

திருப்பரங்குன்றம் ஊர் முறைப்படி மக்கள் உச்சி பிள்ளையார் கோயிலில் தான் தீபம் ஏற்றுகின்றனர். 300 ஆண்டாக இப்படி தான் நடக்கிறது. தனித்தனியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லை காட்டி ஏற்ற சொல்லி விட்டால் விமான நிலையம் முன்பு ஒரு கல்லை காட்டி ஏற்ற சொன்னாலும் சொல்வார்கள். பாஜக வட இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்வது போன்று, பிழைப்பின்றி இங்கு முருகனை வைத்து அரசியல் செய்கின்றனர். இந்த அரசியலுக்கு அப்பாற்பட்டவர் முருகன்.

புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் போலீஸ் சோதனை நடத்தி உள்ளது. காவிரி தமிழகத்தின் உயிர்நாடி. இதில் தமிழக காங்கிரஸ் தெளிவாக உள்ளது. காவிரி விவகாரத்தில் பிரதமர் கர்நாடாகவுக்கு உதவி செய்கிறாரோ என எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

முதல்வர் சிவக்குமாருக்கு தைரியம் வர காரணம் கர்நாடகாவில் 18 பாஜக எம்பிக்கள் இருப்பதால் பிரதமர் உதவி செய்கிறார். உச்ச நீதிமன்ற நடுவர் ஆணையம் உத்தரவின்படி தண்ணீரை கொடுக்க வேண்டும். தமிழக முதல்வரின் 6 மாத கால ஆட்சிக்கு 100 க்கு 90மார்க் கொடுப்பேன். இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT