

எடப்பாடி பழனிசாமி
கோப்புப்படம்
தஞ்சாவூர்: காவிரி நதி நீர் சம்பந்தமான பிரச்சினையில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில், கலந்துகொண்ட கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான நீரை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்காததால், குறுவை சாகுபடி பாதிப்பை சந்தித்தது.
முதல்வர் விஜய் மேட்டூர் அணைக்கு சென்று, 45 நாளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்து, தண்ணீரை திறந்தார். ஆனால் 45 நாளைக்கு மட்டும் தண்ணீர் போதாது. சம்பா சாகுபடி, முழுமை பெற வேண்டும் என்றால், ஜனவரி இறுதி வரை, காவிரியில் தண்ணீரை விட வேண்டும். ஆனால், 45 நாளில் தண்ணீரை நிறுத்தி விட்டார்கள். அத்துடன் மேட்டூர் அணையில் 61 அடி தான் தண்ணீர் உள்ளது. இது மே மாதம் வரை குடிநீர் தேவைக்கு போதாது.
தவெக அரசு, காவிரி நதி நீர் சம்பந்தமான பிரச்சினையில், போதிய கவனம் செலுத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் இவ்வளவு டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால், அந்த உத்தரவின்படி தண்ணீரை பெறுவதற்கான முயற்சியை தவெக அரசு எடுக்கவில்லை.
முதல்வர் விஜய் தனி அக்கறை செலுத்தி, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை மாதாந்திர வாரியாக வழங்க உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று தந்து இருக்க வேண்டும். ஏற்கெனவே, அதிமுக பெற்று தந்த தீர்ப்பை கூட நடைமுறைப்படுத்தாத, கையாலாகாத அரசாக தவெக அரசு உள்ளது.
மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் சிவகுமார் கூறி வருகிறார். ஆனால், தமிழக முதல்வர் வாயே திறக்கவில்லை. இதுக்கு எந்த பதிலும் கிடையாது. இதனால், விவசாயிகள் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளனர். விவசாயிகளின் அச்சத்தை போக்கும் விதமாக, மேகேதாட்டு அணை குறித்து, முதல்வர் விஜய் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
கீழ்படுகை மாநிலத்தின் அனுமதி இல்லாமல், மேல்படுகை மாநிலத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே, எந்த ஒரு கட்டுமானத்தையும் தொடங்க கூடாது. தண்ணீரை தேக்க கூடாது என்ற தீர்ப்பை அதிமுக பெற்று தந்துள்ளது. அதை நடைமுறைப்படுத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியில் 11 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிட்டும், கர்நாடகா திறக்கவில்லை.
இது தொடர்பான தமிழக அரசின் வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த அளவுக்கு இவர்களின் நிர்வாகம் உள்ளது. நீதிமன்றத்தில் சரியான வாதத்தை எடுத்து வைக்கவில்லை. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.