முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

 
தமிழகம்

‘காந்தியடிகள் மீது வன்மம்’ - 100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்துக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: “தேசத் தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்” என்று 100 நாள் வேலை உறுதித் திட்டம் பெயர் மாற்றத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பாஜக அரசு, தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்.

100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம். இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது. வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்.

பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

மூன்று வேளாண் சட்டங்கள், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள். எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே VB-G-RAM-G திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதி திட்​டத்​தின் பெயரை மாற்​றும் மசோ​தாவுக்கு மத்​திய அமைச்​சரவை கடந்த 12-ம் தேதி ஒப்​புதல் அளித்​தது. இதையடுத்து அந்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய மசோதாவின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதி திட்​டத்​தின் பெயர் ‘விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்)’ [Viksit Bharat Guarantee For Rozgar And Ajeevika Mission (Grameen)] என மாற்றப்படுகிறது. சுருக்கமாக இது VB-G-RAM-G என குறிப்பிடப்படும்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற அனைத்து பாஜக எம்பிக்களும் அவைக்கு வர வேண்டும் என அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

இந்தப் புதிய மசோதாவில், வேலை நாட்​களின் எண்​ணிக்கை 100-ல் இருந்து 125 நாட்​களாக அதி​கரிக்​கப்​பட உள்​ளது. மேலும், வேலை முடிந்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கப்படாவிட்டால் வேலையின்மைக்கான படி வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பெயர் மாற்றத்தை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோபால், “ஒரு காலத்​தில் தோல்வி​யின் சின்னம் என்று இந்த திட்டத்தை பிரதமர் மோடி அழைத்​தார். இப்போது அந்த புரட்​சிகர​மான திட்​டத்​துக்கு பெருமை தேடிக்​கொள்​ளும் நோக்​கில் அதன் பெயரை மாற்​றுகிறார். இது இந்​தி​யா​வின் ஆன்மா குடி​யிருக்​கும் கிராமங்​களில் இருந்து மகாத்மா காந்​தியை அழிப்பதற்கான மற்​றொரு வழி” என்று சாடியதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT