தமிழக சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

படம்: எஸ். சத்தியசீலன்

தமிழகம்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை: டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி

தமிழினி

சென்னை: தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால். பின்னர், அவர், ”போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்த நிலையில், தற்போது கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. புதிய ஆட்சி அமையும் முன்னர் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் தமிழக டிஜிபி, தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை மாற்றம் செய்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து, காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், சிறைத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, “தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. முதல்வர் விஜய் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம். தமிழக காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?

கடந்த 1994-ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலம் பதிந்தா பகுதியைச் சேர்ந்தவர். சட்டம் பயின்றவர். 22 வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியானார். தமிழ், இந்தி, ஆங்கிலம், பஞ்சாப் மொழியில் சரளமாக பேசக்கூடியவர். தேனி, தூத்துக்குடி மாவட்டங்களின் எஸ்.பி., சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர் எனப் பொறுப்பு வகித்தார்.

பின்னர் 7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். தொடர்ந்து ஐஜி-யாகப் பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பி சிபிசிஐடி ஐஜி-யாகப் பதவி வகித்தார். மேலும் அவர் மதுரை காவல் ஆணையரானார். மீண்டும் சிபிசிஐடி ஐஜி ஆனார். பின்னர் சென்னை தெற்கு கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் 2020-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றார். பின்னர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்தார். அதன் பின்னர் அயல்பணியாக டெல்லி சென்ற அவர், தற்போது தமிழக டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும், பொது சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதல்வர் பதக்கத்தையும் வென்ற இவர் சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் திறம்பட செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT