ருக்மணி பழனிவேல்ராஜன்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் பதவிக்கு திமுகவினர் பலர் தீவிரமாக முயற்சித்தனர். இதில், அமைச்சரின் தாயார் உள்ளிட்ட பழைய உறுப்பினர்களையே மீண்டும் அறங்காவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராக கருமுத்து தி.கண்ணன், 18 ஆண்டுகள் பதவி வகித்தார். இவர் 2023 மே 23-ம் தேதி காலமானார். அதனையடுத்து கோயில் தக்காராக இந்துசமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் க.மணிவாசன், 2023 நவ.6-ம் தேதி 5 பேரை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமித்தார். இதில் அமைச்சர் பழனிவேல் தியாராஜன் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன், மதுரை காந்தி நகரைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் டி.சுப்புலெட்சுமி, அண்ணாநகர் தொழிலதிபர் பி.கே.எம்.செல்லையா, கே.கே.நகர் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மு.சீனிவாசன், உயர் நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதியின் மனைவி எஸ்.மீனா ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டனர்.
2023 டிச.1-ல் அறங்காவலர் உறுப்பினராக பதவியேற்றனர். பின்னர் அறங்காவலர் குழுத் தலைவராக 2023 டிச.22-ல் பதவியேற்றார். பதவியேற்ற நாளிலிருந்து 2 ஆண்டுகள் பதவி காலாவதியாகும்.
இதனிடையே மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்காக பணிகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன. இதில் தீ விபத்தில் சேதமான வீரவசந்தராயர் மண்டபப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால் திமுகவினர் பலர் அறங்காவலர் பதவிக்கு தீவிரமாக முயற்சித்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு ஏற்கெனவே இருந்த அறங்காவலர்களையே நியமனம் செய்தும் மேலும் 2 ஆண்டுகளுக்கு பதவி காலத்தை நீட்டிப்பு செய்தும் 2025 டிச.30-ல் உத்தரவிட்டது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன் மீண்டும் அறங்காவலர் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.