மதுரையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட கடையின் முகப்பு தோற்றம். (அடுத்த படம்) நகைக்கடை பெண் ஊழியர்களின் கைரேகையை பதிவு செய்யும் போலீஸார். படங்கள் நா.தங்கரத்தினம்
மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையில் ரூ.50 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வணிக வளாகம் உள்ளது. இங் குகட்டுமான பணிகள் முழுமையாக முடியும் முன்னரே தீபாவளி விற்பனையை கணக்கில் கொண்டு பிரபல தனியார் நிறுவனத்தின் (தனிஷ்க்) நகைக்கடை திறக்கப்பட்டது.
முதல் தளத்தில் மட்டும் நகை விற்பனை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து கடை பூட்டப்பட்டது. நேற்று காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வந்து கடையைத் திறந்தபோது ரேக்குகளில் வைத்திருந்த நகைகளைக் காணவில்லை. சில நகைகள் சிதறிக் கிடந்தன. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். கடை ஊழியர்கள், கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் பின்புறம் மின்தூக்கி அமைப்பதற்காகப் போடப்பட்டிருந்த சாரம் வழியாக கொள்ளையர்கள் கடையின் மேலே ஏறிச் சென்றது தெரியவந்துள்ளது. அங்கிருந்த எக்ஸாஸ்ட் பேனை அகற்றிவிட்டு, அதன் வழியாகக் கடைக்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் ரேக்குகளில் இருந்த நகைகளைப் பைகளில் நிதானமாக அள்ளிச் சென்றுள்ளனர். கடையின் பின்புறம் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்தது தெரியவந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் இந்தக் கொள்ளை நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
புதிய கடை என்பதால் தொடக்கத்தில் 48 கிலோ தங்க நகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில் விற்பனை செய்தது போக மீதமிருந்த 30 கிலோ (3,750 பவுன்) தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.50 கோடிக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாடக்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கியச் சந்திப்பில், சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் கொள்ளை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களைப் பிடிக்க துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 5 உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாடக்குளம், நேரு நகர், பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் விசாரணை நடத்தினர். ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கடையில் பணிபுரியும் 25 ஊழியர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் விவரங்களும் திரட்டப்பட்டுள்ளன.
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, “கடையின் முறையான திறப்பு விழா இம்மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பொதுவாக விற்பனை முடிந்ததும் நகைகளைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பது வழக்கம். ஆனால், இந்தக் கடையில் நகைகள் லாக்கரில் வைக்கப்படாமல் ரேக்குகளிலேயே வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்த விவரம் கடை ஊழியர்கள் மற்றும் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
மேலும், கடையில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதிகளும் இல்லை. இந்த விவரங்களை அறிந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொள்ளை நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். கொள்ளை நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பதிவான செல்போன் அழைப்புகள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேமரா பதிவில் முகமூடி அணிந்த ஒருவரின் உருவம் பதிவாகியுள்ளது. விரைவில் கொள்ளையர்களைக் கைது செய்து நகைகளை மீட்போம்’’ என்றனர்.
ஒலி எழுப்பும் நகைகளை தவிர்த்த கொள்ளையர்கள்: நகைக்கடையின் ரேக்குகளில் பல்வேறு வடிவமைப்புகளில் நகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில நகைகளை ஊழியர்களைத் தவிர வேறு யாராவது எடுத்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை அறிந்த கொள்ளையர்கள், அத்தகைய நகைகளைத் தவிர்த்து மற்ற நகைகளை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.
எச்சரிக்கை ஒலி எழுப்பும் நகைகள் குறித்த விவரம் கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதனால், கடை ஊழியர்களில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.