விபத்து நிகழ்ந்த உடனேயே அசல் ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்வது ஏற்புடையது அல்ல என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல், திருச்சி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் இருவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாங்கள் பேருந்துகள் இயக்கியபோது விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து எங்களின் அசல் ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டனர். விதிமுறைகளை பின்பற்றாமல் எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மதுரை-போடி மற்றும் ஜெயங்கொண்டம்-திருச்சி வழித்தடங்களில் நடைபெற்ற விபத்துகளுக்காக மனுதாரர்களின் அசல் ஓட்டுநர் உரிமங்களை போலீஸார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். விபத்து நடந்த மறுநாள் ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்வது ஏற்புடையது அல்ல. மோட்டார் வாகனச் சட்டப்படி, விபத்து நேரிடும்போது ஓட்டுநர் உரிமங்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கிய பிறகே பறிமுதல் செய்ய வேண்டும்.
விபத்து நிகழ்ந்த உடனே, விசாரணையின் தொடக்கத்திலேயே ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்வது சரியல்ல. எனவே மனுதாரர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை உசிலம்பட்டி, லால்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.