தமிழகம்

முதல்வர் விஜய்யை ‘கூத்தாடி’ என பேசியதாக நாதக நிர்வாகி மீது பதிவு செய்த வழக்கு ரத்து

உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: முதல்வர் விஜய்யை 'கூத்தாடி' எனப் பேசியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது.

நாம் தமிழர் கட்சி மீனவர் பேரவை மாநில நிர்வாகி தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு : தமிழக முதல்வர் விஜய்யை, கூத்தாடி எனப் பேசி இழிவுபடுத்தியதாக என் மீது ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு முதல்வர் அரசு வேலை கொடுத்ததை தொடர்ந்து, முதல்வரை இழிவுபடுத்தும் விதமாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும், அதில் முதல்வரை கூத்தாடி எனப் பேசி முதல்வரை அவமானப்படுத்தியதாக கூறப்பட்டிருந்தாக புகாரில் கூறப்பட்டிருந்தது. இப்புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், ‘கூத்தாடி என்ற சொல் நடிகர்களை குறிக்கும் பொதுவான சொல். தமிழ் இலக்கியத்தில் பல்வேறு இடங்களில் இந்தச் சொல் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, கூத்தாடி என்ற சொல் யாரையும் இழிவுபடுத்தக்கூடிய சொல் அல்ல. அதையே தான் மனுதாரர் பயன்படுத்தியுள்ளார். முகாந்திரம் இல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டது.

அரசு தரப்பில், ‘தமிழக முதல்வரை இழிவுபடுத்தும் விதமாகத்தான் மனுதாரர் பேசியுள்ளார். மேலும் அவரது பேச்சில் இந்த வழக்கை சட்டரீதியாக சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் வழக்கை சந்திக்கட்டும். ரத்து செய்யக்கூடாது’ எனக் கூறினார். பின்னர் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT