காதல் திருமணங்கள் பெற்றோர் எதிர்ப்பால் போக்சோ வழக்குகளாக மாறுவது அதிகரித்துள்ளதாகவும், இதனால் இளைஞர்கள் நீண்ட காலம் சிறையில் இருக்க நேரிடுவதும் கவலை அளிப்பதாக, உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஷ் என்பவர். தனது நண்பரின் சகோதரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அப்போது, அவருக்கு வயது 16 என்பதால், மகேஷ் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2018 மார்ச் 4ம் தேதி காலை வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண். மகேஷுடன் அவரது உறவினர் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டதாகவும்,அதன்பின் அவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் 'குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து மகேஷை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம், மகேஷுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மகேஷ். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா அளித்த தீர்ப்பு: பாதிக்கப்பட்ட பெண்ணின் வயதை நிரூபிப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை அசல் ஆவணங்களாக அல்லாமல் நகல்களாக உள்ளன. அசல் ஆவணங்கள் இருந்தும் தாக்கல் செய்யப்படாத நிலையில், அவற்றை ஆதாரமாக ஏற்க முடியாது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது நிரூபிக்கப்படாத நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. அதனடிப்படையில், கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவர் வேறு எந்த வழக்கிலும் தேவைப்படாவிட்டால், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடையிலான ஒப்புதல் காதல் திருமணங்கள். பெற்றோரின் எதிர்ப்பால் பின்னர் போக்சோ வழக்குகளாக மாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வழக்குகளில் இளைஞர்கள் நீண்ட காலம் சிறையில் இருக்க நேரிடுவது கவலை அளிக்கிறது.
போக்சோ சட்டம் குறித்து பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசின் முதன்மைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.