மதுரை: திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதியின் அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து, நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற உத்தரவை செயல்படுத்தாததால், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர்கள் மற்றும் 10 பேர் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுமாறும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டார். ஆனால், தீபம் ஏற்ற போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில், தனி நீதிபதியின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர்தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மற்றும் மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அரசுத் தரப்பில், "நீதிமன்ற பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள சிஐஎஸ்எப் வீரர்களை மனுதாரர்கள் பாதுகாப்புக்கு அனுப்பியது சட்டவிரோதமாகும். காலஅவகாசம் இருந்த போதிலும், இந்த மனுவை தனிநீதிபதி அவசரமாக ஏற்றுக் கொண்டுள்ளார். நீதிபதியின் உத்தரவால் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோல, தர்கா தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவது அரசு இயந்திரத்தின், அரசியலமைப்புக் கடமையாகும். ஆனால், தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தவில்லை. மாற்று நிவாரணத்தைக்கூட பின்பற்றவில்லை. மனுதாரர் மற்றும் 10 பேர் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்என்று உத்தரவு பிறப்பித்த நிலையில், திருப்பரங்குன்றத்தில்144 தடை உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்? நீதிமன்ற உத்தரவை நிர்வாக உத்தரவு கட்டுப்படுத்துமா?
வழக்கின் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, மேல்முறையீட்டாளர்கள் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்று தெரிகிறது. இது நன்கு வடிவமைக்கப்பட்ட செயலாகும். தனி நீதிபதி உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே பின்பற்றவில்லையா என்பதை சோதிக்க வேண்டும். மேல்முறையீட்டில் அதிகாரிகளின் நடத்தை குறித்து அவசரமாக முடிவுக்கு வர முடியாது.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் முடிவு செய்திருப்பதை கண்டறிந்த தனி நீதிபதி, தீர்ப்பை நிறைவேற்ற சிஐஎஸ்எப் உதவியை கோரியுள்ளார். மாநில காவல் துறையால் அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற, மத்திய படையின் உதவியைப் பெறுவதில் சட்டவிரோதம் இல்லை.
மேலும், நீதிமன்றத்தின் முதல் உத்தரவில், நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றும் பொறுப்பு கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்தப் பொறுப்பை நிறைவேற்றாததால், மனுதாரர்களிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை முன்கூட்டியே தடுக்கும் மறைமுக நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளனர்.