மதுரை: மதுரை - குருவாயூர் ரயிலில் கண்ணாடி மேற்கூரை உடன் கூடிய விஸ்டாடோம் பெட்டி ஜனவரி 15 வரை இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்ததால் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 15 வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக கண்ணாடி மேற்கூரை உடன் கூடிய விஸ்டாடோம் வகை ரயில் பெட்டி, மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 22 முதல் இணைக்கப்பட்டது. இந்த ரயில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் வழியாக செங்கோட்டை - புனலூர் இடையேயான 49 கி.மீ. தூரத்தை 30 கி.மீ.க்கும் குறைவான வேகத்தில் பயணிக்கிறது.
மலை ரயில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சோதனை முயற்சியாக அக். 22 முதல் ஜன.16 வரை வாரம் 4 நாட்கள் விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது. விஸ்டாடோம் பெட்டி மதுரை - குருவாயூர் ரயிலில் (16327) வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும், குருவாயூர் - மதுரை (16328) ரயிலில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களிலும் இணைக்கப்பட்டு இருக்கும்.
விஸ்டாடோம் பெட்டியின் முதல் சேவை தொடங்குவதற்கு முன்பே 60 நாட்களுக்கான டிக்கெட் முழுவதும் விற்பனையாகி, காத்திருப்போர் பட்டியல் அதிகரிக்க தொடங்கியது. ஜனவரி 16 வரை விஸ்டாடோம் பெட்டியில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மதுரை - குருவாயூர் ரயிலில் பிப்ரவரி 15 வரை விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.