ஆர்.வி.அர்லேகர், நிஷாந்த் கிருஷ்ணா
மதுரை / சென்னை: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றாததற்கு, உச்ச நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் மன்னிப்பு கேட்டு அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், நீதிமன்ற உத்தரவை மீறியது குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்டு ஆளுநர் கடிதம் அனுப்பி உள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீது உள்ள தீபத் தூணில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நேற்றுமுன்தினம் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் முருக பக்தர்கள் கடும் கோபம் அடைந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த ஆண்டும் தீபம் ஏற்றாததால், சாலை மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு நடைபெற்றது.
இந்தச் சூழ்நிலையில், 3 நாட்கள் அவகாசம் இருந்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்றே உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு 17 பக்கங்கள் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது: நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, வருவாய்த் துறை அதிகாரிகளுடன் முதல் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்.
தொடர்ந்து நவம்பர் 21-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தகவல் மற்றும் மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கும் கோயில் செயல் அலுவலருக்கும் அனுப்பி வைத்தார். அதே நாள் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் விரிவாக விளக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, நவம்பர் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10 நபர்கள் கொண்ட குழுவினரால் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும். வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, இந்தியத் தொல்லியல் துறை ஆகியவற்றில் இருந்து தலா ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும். கோயில் வழக்கப்படி தீபம் ஏற்றும் முறையைச் செயல் அலுவலர் முடிவு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நவம்பர் 22-ம் தேதி, கோயில் நிர்வாக முன்மொழிவு மற்றும் பாதுகாப்புத் திட்டம் மற்றும் 3-வது ஒருங்கிணைப்புக் கூட்டமும் நடைபெற்றன. தேவஸ்தானத்துக்கும், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கும் அனுப்பப்பட்ட முதல் கடிதத்தில், அங்கீகரிக்கப்பட்ட குழுவினரால் மட்டுமே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி, நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பழனியாண்டவர் கோயில் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை தற்காலிக மின் விளக்குகள் அமைத்தல், நவம்பர் 24-ம் தேதி காலை 6 மணிக்கு 27 பேர் கொண்ட முன்னேற்பாட்டுக் குழு மலைக்குச் செல்லுதல், பிற்பகல் 2 மணிக்கு 2 கோயில் ஸ்தானீகர்கள், அறங்காவலர் குழுத் தலைவர், கண்காணிப்பாளர், தலைமை எழுத்தர் (திருவிழாப் பிரிவு), தொழில்நுட்ப உதவியாளர், பேஷ்கார், அலுவலக உதவியாளர் மற்றும் 2 தீபத் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகிய 10 பேர் கொண்ட குழு செல்லுதல் என திட்டமிடப்பட்டது.
‘திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் பாதுகாப்புத் திட்டம்’ காவல் துறையால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் 5,797 காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதையடுத்து, நவம்பர் 23-ம் தேதியன்று 3-வது கூட்டம் நடைபெற்றது. அப்போது, காவல்துறையினர் மற்றும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவும், எந்தவொரு நபரும் திருப்பரங்குன்றம் மலையில் ஏறவும் மதுரை மாவட்டத்தில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நவம்பர் 24-ம் தேதி, கார்த்திகை திருவிழா நாள் நிகழ்வுகள் குறித்து காலை 9.30 முதல் 12.30 வரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி, காவல் ஆணையருடன் இணைந்து திருப்பரங்குன்றம் மலையில் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. காலை 11.30 மணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்களுக்குத் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்த பின்னரே முன்னேற்பாட்டுப் பணிகளும் தீபம் ஏற்றும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர் தரப்பில் கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
பிற்பகல் 3.47 மணியளவில், தேவஸ்தான அங்கீகாரம் இன்னும் வராததால், அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய ஒப்புதலை உடனடியாக வழங்குமாறு இந்து சமய அறநிலைய துறைக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. மாலை 5.03 மணிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும், எவ்வித நிர்வாகத் தடைகளும் இன்றி உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட குழுவுடன் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறும் ஒருங்கிணைப்பு அதிகாரி என்ற முறையில் ஆட்சியர் மின்னஞ்சல் அனுப்பினார்.
ஆனால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தக் குழுவும் தீபம் ஏற்ற வரவில்லை. நேர நீட்டிப்பும் கோரப்படவில்லை. இந்நிலையில், இரவு 7.32 மணிக்கு கோயிலின் செய்திக்குறிப்பு வெளியானது. இதுகுறித்து தொடர்பு கொண்ட போது, அறங்காவலர் குழுவின் தீர்மானத்தால் தன்னால் முன்னேற இயலவில்லை என அறநிலையத் துறை செயல் அலுவலர் தெரிவித்தார்.
இரவு 8.30 மணிக்குச் செயல் அலுவலர் அளித்த அறிக்கையில், “கோயில் அறங்காவலர் குழுவின் தீர்மானப்படி வழக்கமாக ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணிக்கு உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டது.
தேவஸ்தானம் அங்கீகரிக்கும் நபர்களுக்குப் பதிலாக வேறு யாரையும் அங்கீகரிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு இல்லை. தேவஸ்தானம் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவை அமைத்து பரிந்துரைக்காததால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபத் தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பழமையான வழிபாட்டுத் தலம். இதன் சடங்குகள் தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் மத மரபுகள் மற்றும் ஆகம விதிகளின்படியே நடத்தப்படுகின்றன.
எனவே, தொன்றுதொட்டுப் பின்பற்றப்படும் வழக்கப்படி, கார்த்திகை மகா தீபம் மூலவரின் தலைக்கு நேர் மேலே மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தகைய மரபுகள் கோயிலின் தனித்துவமான மத அடையாளமாகும். ஆகமச் சான்றுகள் அடிப்படையில், இந்த மரபுகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஆண்டும் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றுவது என்று கோயில் அறங்காவலர் குழு தீர்மானித்தது.
ஆனால், தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தையும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதையும் உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளையும் எடுத்த போதிலும், அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றத் தீர்மானித்ததால் தீபத் தூணில் தீபம் ஏற்ற முடியாமல் போனது. அதற்காக மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோருகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், தீபத் தூணில் தீபம் ஏற்றாமல் விட்டதற்காக உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்த வேண்டும் என்று நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தால், அதை விசாரணைக்குப் பரிசீலிப்போம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்து அமைப்புகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியது தொடர்பாக அறிக்கை அளிக்க ஆளுநர் ஆர்.வி.அர்லேகரும் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக ஆளுநர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதா என்பது குறித்து சட்டப்பிரிவு 167 - ன் கீழ் முழுமையான அறிக்கை அளிக்க வேண்டும். விதிமீறல் இருப்பின் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அடிப்படையான அரசு உத்தரவு, போலீஸாரின் அறிவுறுத்தல் குறித்தும் தெரிவிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாகிகள், ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், “திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.