மதுரை விமான நிலையம்

 
தமிழகம்

சர்வதேச விமான நிலையமாக தரம் உயரும் மதுரை விமான நிலையம்!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தமிழகத்தின் கோயில் நகரமான மதுரையில் அமைந்துள்ள மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்க உள்ளது. இதற்கான திட்டத்துக்கு இன்று (மார்ச் 10) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

மதுரை விமான நிலையம் மாநிலத்தின் மிகப் பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். இது, தென் தமிழகத்துக்கு பயணிக்கும் மக்களுக்கு ஒரு முக்கியமான நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.

          

மத்திய அரசின் அதிகாரிகள் கூற்றுப்படி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச அளவில் மேம்படுத்துவது இந்த பிராந்தியத்தையும் சர்வதேச அளவில் மேம்படுத்தும். மதுரை ஒரு முக்கிய மத மற்றும் கலாச்சார மையமாக இருப்பதால், இது சுற்றுலா மற்றும் புனித யாத்திரை பயணத்தை அதிகரிக்கும்.

மத்திய அரசின் இந்த முடிவால், மதுரைக்கு சர்வதேச யாத்ரீகர்கள் மற்றும் வணிக பயணிகள் ஈர்க்கப்படுவர். மேலும், மதுரையின் பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஆதரிக்கவும் உதவும் என குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து மதுரையின் மக்களவை தொகுதி எம்பியான சு.வெங்கடேசன் கூறுகையில், “கடந்த 2019-ம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டவுடன், மக்களவையில் எனது இரண்டாவது உரை ‘மதுரை - சர்வதேச விமான நிலைய கோரிக்கை’ பற்றியது. அன்று துவங்கி இந்த ஏழு ஆண்டுகளும் இடைவிடாது எழுப்பிய எங்களின் கோரிக்கை இன்று வெற்றிபெற்றுள்ளது.

எங்களின் இடைவிடாத போராட்டம் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்த தென் தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் இம்முடிவுக்காக நீண்ட காலம், இடைவிடாது போராடி வந்தோம். எங்களின் போராட்டம் வெற்றி பெற்றது. இனி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்கான பணிகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT